திரை விமர்சனம்
அயலான் – திரை விமர்சனம்

அயலான் – திரை விமர்சனம்
[புதியவன்]
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அயலான்.
அண்டவெளியின் சமநிலையை பாதுகாக்க பூமிக்கு வரவிருக்கும் ஆபத்தை நிறுத்தி அழிவிலிருந்து பாதுகாக்க வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வருகிறது ஏலியன் ஒன்று. பூமிக்கு வரும் ஏலியனுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன அப்படி என்ன ஆபத்து பூமிக்கு வரவிருக்கிறது இதற்கிடையில் ஏலியன் வந்த விண்கலம் காணாமல் போக பூமியில் இருக்கும் தமிழ் ( சிவகார்த்திகேயன்) மற்றும் அவரது நண்பர்களுடன் பாதுகாப்பாக தஞ்சம் அடைகிறது. தொடர்ந்து ஏலியன் தான் வந்த வேலையை முடித்து தன் கிரகத்திற்கு திரும்பியதா இல்லையா என்பது மீதி கதை.
படம் முழுக்க புகை மது உள்ளிட்ட எவ்வித காட்சிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான படமாக கொடுத்திருக்கும் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் பாராட்டுக்கள்.
சிவகார்த்திகேயனின் வழக்கமான ஜாலி , கேலி நடிப்பு அப்பாவி முகம் ஏலியனுடன் உண்டாகும் நட்பு என குழந்தைகளை கவர என்னென்ன சிறப்பம்சங்கள் தேவையோ அத்தனையையும் கொடுத்திருக்கிறார்.
ரகுல் பிரீத் சிங், வழக்கமான கமர்சியல் திரைப்பட நாயகி ஆக அழகாக இருக்கிறார், காதலிக்கிறார், நடனம் ஆடுகிறார் ,ஹீரோவின் குழுவுடனையே சுற்றி திரிகிறார். அதை தாண்டி பெரிதாக அவருக்கு கதையில் வேலை இல்லை என்றாலும் கதையை அவர் இடையூறு செய்யவில்லை. படத்தின் மிகப்பெரிய பலம் ஏலியனாக நடித்த வெங்கட் செங்குட்டுவன் தான். ஏலியன் உடல்வாகு நக்கல், கிண்டல் என பல இடங்களில் கவனம் பெறுகிறார். உடன் யோகி பாபு மற்றும் கருணாகரன் குழுவுடன் இணைந்து ஆங்காங்கே காமெடியிலும் கலக்கி இருக்கிறார்
நிரவ் ஷா ஒளிப்பதிவு ஏலியனுடன் நடக்கும் சண்டைகள் மற்றும் சேசிங் காட்சிகள் என அருமை. ஏ. ஆர். ரஹ்மான் இசை குறித்து பாராட்ட இனி என்ன வார்த்தைகள் இருக்கின்றன நாம் ஒரு அறிவியல் சார்ந்த படம் பார்க்கிறோம் எனில் படத்திற்கான பின்னணி இசை மிக மிக முக்கியம் அதற்கு சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். பாடல்கள் இன்னும் சிறப்பான பாடல்களாக கொடுத்திருக்கலாம் பொதுவாகவே சிவகார்த்திகேயனின் பாடல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் டிரண்டாகும் என்கிற பட்சத்தில் இந்த படத்தின் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. அயலான் தீம் பாடல் படம் முடிந்த பிறகும் மண்டைக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் சில லாஜிக் பிரச்சனைகள் மற்றும் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தும் காவல்துறையின் தலையீடு இல்லாமை, அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லாமல் ரகசியமாக நடக்கும் ஒரு ப்ராஜெக்ட் என இதெல்லாம் சற்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் ஹாலிவுட் மட்டுமே பார்த்து பழகிய ஏலியன்களை நம் இந்திய சினிமாவில் அதிலும் தமிழ் பேசி நடிப்பதை பார்க்கும் பொழுது கூடிய சீக்கிரம் வல்லரசு ஆகிடும் என் ஆறுதலாக இருக்கிறது. மேலும் நல்ல கருத்தையும் படம் முழுக்க சொன்ன விதத்தில் இந்த லாஜிக்குகளும் காணாமல் போகின்றன. ஃபேண்டம் வி. எஃப்.எக்ஸ் கிராபிக் படத்துக்கு மற்றுமொரு பலம்.
வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள், புகை, மது, குறிப்பாக போதை பொருட்கள் என எதுவும் இல்லாமல் இக்காலத்திலும் ஒரு படம் கொடுக்க முடியும் என நிரூபித்த விதத்திலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான அத்தனை சிறப்பு அம்சங்களும் கொண்டிருக்கும் நிலையில் 100% பொங்கல் சிறப்பு திரைப்படமாக அயலான் மாறி இருக்கிறது. [எ]