இந்தியா
“நாங்கள் என்ன மனநோயாளியா?” – விஜயை பாராட்டியதற்கு சீமான் ரியாக்ஷன்

“நாங்கள் என்ன மனநோயாளியா?” – விஜயை பாராட்டியதற்கு சீமான் ரியாக்ஷன்
தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயலின் காரணமாக சென்னையும் ஓரளவுக்கு பாதிப்பை சந்தித்தது. சில இடங்களில், நீர் தேங்கி போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல், சென்னை டி.பி. சத்திரத்தில் மழை தண்ணீர் தேங்கி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்பைச் சந்தித்தனர்.
இதன் காரணமாக தவெக தலைவர் விஜய், டி.பி.சத்திரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், அவர்களை அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவதா என தொடர் விமர்சனங்கள் எழுந்தன.
அதேசமயம், நிவாரணம் வாங்கிவிட்டு வெளியே வந்தவர்கள் பேசியபோது, “பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்கியிருக்கலாம். ஆனால், அப்படி வந்தால் உங்கள் குறைகளையோ, பிரச்சனைகளையோ கேட்டு அறிந்திருக்க முடியாது. இவ்வளவு சகஜமாக அமர்ந்து பேச முடியாது. அதன் காரணமாக உங்களை இங்கு வரவழைத்து நிவாரணம் வழங்குகிறேன்” என்று விஜய் தெரிவித்ததாக கூறினார்கள்.
அதேசமயம், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவதா என சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.
இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நான் 7 மற்றும் 8ம் தேதிகளில் களத்திற்கு செல்ல இருக்கிறேன். விஜய் களத்தில் செல்வதில் சிக்கல் இருக்கிறது. அவர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க சென்றால், அவரை காண்பதற்கு அதிகமாக கூட்டம் கூடும்.
இதனால் ஒரு பிரச்சனை வரும், பின்னர் அந்த பிரச்சனையையும் அவர் சமாளிக்க வேண்டும். கூட்டம் கூடி பிரச்சனையானால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என அதற்கு ஒரு விமர்சனம் வரும். உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் நேரில் வரவழைத்தாவது நிவாரணம் கொடுத்திருக்கிறாரே அதற்காக அவரை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
தவெக மாநாடு முடிந்ததில் இருந்து விஜயை, கடுமையாக விமர்சித்துவந்த சீமான், திடீரென விஜயை பாராட்டியது பொதுவாக கவனிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், விமர்சித்துவந்த விஜயை பாராட்டியது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியுமா. அதனை பாராட்டிதானே ஆகவேண்டும். எப்போதும் குறை சொல்லிக்கொண்டு இருக்க நாங்கள் மன நோயாளி அல்ல. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு” என்று பதில் அளித்தார்.