இந்தியா
ஆன்லைன் பட்டாசு மோசடி: புதுச்சேரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
ஆன்லைன் பட்டாசு மோசடி: புதுச்சேரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், இணையத்தில் வரும் போலியான பட்டாசு விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். கடந்தாண்டு, இதுபோன்று 117க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவான நிலையில், இந்த ஆண்டும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றமடைந்து வருவதாக புதுச்சேரி இணையவழிக் காவல்துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு, ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில், இந்த வழக்கம் மேலும் அதிகமாகி, பட்டாசுகளை வீட்டிலிருந்தே வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை பயன்படுத்தி, இணையவழி குற்றவாளிகள் பிரபலமான பட்டாசு விற்பனையாளர்களின் பெயரில் போலி வலைத்தளங்களை உருவாக்கி, போலியான விளம்பரங்களை வெளியிட்டு, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு, இந்த மோசடிகளால் பொதுமக்கள் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்தனர். தொடர்ந்து இணையவழிக் குற்றங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தும், மக்கள் மீண்டும் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறுவது கவலையளிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.காவல்துறையின் அறிவுரை: பொதுமக்கள் இணையத்தில் எந்தப் பொருளையும் வாங்கும் முன், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். விளம்பரதாரரின் முழு விவரங்களையும் சரிபார்த்த பின்னரே பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். ஆன்லைன் விளம்பரங்களை மட்டும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என புதுச்சேரி இணையவழிக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இணையவழி குற்றங்கள் குறித்துப் புகார் அளிக்க அல்லது சந்தேகம் இருந்தால், பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம்:இலவச தொலைபேசி எண்: 1930, போன்: 0413-2276144, 9489205246, மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
