இந்தியா
இந்தியர் ராஜ வசந்த் ராஜசேகர் நெகிழ்ச்சி: ‘இனி விசா கவலை இல்லை; அமெரிக்க கிரீன் கார்டு பெற 14 ஆண்டு பயணம்’
இந்தியர் ராஜ வசந்த் ராஜசேகர் நெகிழ்ச்சி: ‘இனி விசா கவலை இல்லை; அமெரிக்க கிரீன் கார்டு பெற 14 ஆண்டு பயணம்’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தியுள்ளார். இந்தச் சூழலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராஜவசந்த் ராஜசேகர், தனது 14 ஆண்டுகால அமெரிக்க குடியேற்றப் பயணத்தைப் பற்றி சமூக வலைத்தளமான லின்ங்கிடினில் (LinkedIn) பகிர்ந்துள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.ராஜசேகர் 2011-ல் மாணவர் விசாவில் (F-1) அமெரிக்கா சென்று, இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பேன் பல்கலைக்கழகத்தில் (UIUC) இயந்திரப் பொறியியல் பயின்றார். தனது பதிவில், “எனது பயணம் சலுகைகள் நிறைந்ததாகவும், எளிதாகவும் இருந்தது. F-1 விசா புதுப்பித்தல், OPT + STEM, கோவிட் பெருந்தொற்றின்போது கிடைத்த H-1B விசா, மற்றும் இறுதியில் பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு என அனைத்தும் கல்வி மற்றும் வாழ்க்கையில் செய்யப்பட்ட பெரிய முதலீட்டின் பலன்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பேன் பல்கலைக்கழகத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுப் பணியும், சான்டியா நேஷனல் லேபரட்டரீஸில் ஐந்து ஆண்டுகள் முதுமுனைவர் (postdoctoral) ஆராய்ச்சியிலும் ஈடுபட்ட பின்னர், தற்போது கொலராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸ்-ல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த தொடர்ச்சியான வளர்ச்சி இருந்தபோதிலும், “விசா கடிகாரம்” எப்போதும் தனது மனதில் ஓடிக்கொண்டே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். “2020 பிப்ரவரியில், எனது மேலாளரிடம், ‘பாதுகாப்புக்காக எச்-1பி விசா விண்ணப்பத்தைத் தொடங்கலாமா?’ என்று கேட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது” என்று அவர் தனது பதற்றத்தைப் பகிர்ந்து கொண்டார்.அவருக்கு நிதி நெருக்கடியோ, வேலை நிச்சயமற்ற தன்மையோ இல்லாவிட்டாலும், விசா தொடர்பான அச்சம் அவரைவிட்டு அகலவில்லை. அவரது ஈபி1ஏ (EB1A) கிரீன் கார்டு விண்ணப்பம், அவரது பணியின் முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கூடுதல் ஆதாரங்களுக்கான கோரிக்கையை எதிர்கொண்டது. இருப்பினும், தனது வழிகாட்டிகளின் உதவியுடனும், கூடுதல் ஆவணங்களுடனும் அவர் ஒப்புதல் பெற்றார். “இன்று, அந்த கடிகாரம் இல்லை. அதுவே எனக்கு இருக்கும் ஒரே பெரிய வித்தியாசம்” என்று ராஜசேகர் எழுதியுள்ளார். “அமெரிக்கக் கனவு, அதன் உண்மையான அர்த்தம் எதுவாக இருந்தாலும், அது உயிர்ப்புடன் இருக்க வேண்டும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நான் நம்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், டிரம்ப் அரசு அறிவித்துள்ள எச்-1பி விசா கட்டண உயர்வு, அவரது கடுமையான குடியேற்றக் கொள்கைகளில் ஒன்றாகும். 100,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 88 லட்சம்) கட்டணம் விதிப்பதன் மூலம், “மிகவும் திறமையான” நபர்கள் மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைவதை உறுதி செய்ய முடியும் என்றும், இதனால் அமெரிக்கப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. 1990-ல் உருவாக்கப்பட்ட எச்-1பி விசா, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் உள்நாட்டுத் திறமை குறைவாக இருக்கும்போது வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுகிறது.
