உலகம்
ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி; ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் – 8 பேர் சாவு!
ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி; ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் – 8 பேர் சாவு!
இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகஇஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் அதிரடி குண்டுவீச்சு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். இதன் பகுதியாக, அரபிக்கடல் மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு, இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன், இஸ்ரேலின் கடற்கரை நகரமான எலியட்டை தாக்கியது. இதில் 22 பேர் காயமடைந்தனர்; 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்தது. இதனையடுத்து, நேற்று இஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இருப்பிடங்கள், பாதுகாப்பு அலுவலகங்கள் மற்றும் உளவுத்துறை அலுவலகங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 8 பேர் உயிரிழந்ததுடன், 140 பேர் காயமடைந்திருந்துள்ளனர்.
