இலங்கை
அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தால் எதிராக சட்ட நடவடிக்கை
அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தால் எதிராக சட்ட நடவடிக்கை
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்கள் கடந்த இரண்டு வாரங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைவிட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுமானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக நிலைய உரிமையாளரொருவர், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்து, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால், அவருக்கு 1 இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது 5 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனைகளும் விதிக்கப்படலாம் என குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், நிறுவனமொன்றின் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால், 5 இலட்சம் ரூபாய் முதல் 50 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனைகளும் விதிக்கப்படும்.
அத்துடன், அதிகாரசபை சட்டத்தின் கீழ் தொடர்புடைய பொருட்களைப் பறிமுதல் செய்ய முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி தொடர்பான சோதனைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்தியுள்ளது.
