இலங்கை
சஷீந்திர ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
சஷீந்திர ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
சஷீந்திர ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை (30) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சட்ட பிரதிநிதிகள் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களில் இருந்து சஷீந்திர ராஜபக்ச தொடர்பில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான அறிக்கையை அடுத்த விசாரணை திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் இழப்பீடு பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ஓகஸ்ட் 06 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
