வணிகம்
இன்று முதல் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் இப்படித்தான்: ஆதார்- ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு இணைப்பது எப்படி?
இன்று முதல் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் இப்படித்தான்: ஆதார்- ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு இணைப்பது எப்படி?
ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையில் கள்ளச் சந்தையைக் கட்டுப்படுத்தவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு இன்று முதல் (அக்.1) முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனிமேல் முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்குள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை தட்கல் (Tatkal) முன்பதிவுகளுக்கு மட்டுமே இருந்த இந்த நடைமுறை, இனி சாதாரண முன்பதிவுகளுக்கும் (General Reservation) நீட்டிக்கப்பட்டுள்ளது.”முன்பதிவு அமைப்பின் பலன்கள் சாதாரண பயனாளியைச் சென்றடைவதை உறுதி செய்யவும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், இன்று (அக்டோபர் 1, 2025) முதல், சாதாரண முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்குள், ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனாளர்களால் மட்டுமே இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) இணையதளம் அல்லது செயலி மூலம் பொது முன்பதிவு டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சகத்தின் சுற்றறிக்கை செப்டம்பர் 15, 2025 அன்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டிருந்தது.முதல் 15 நிமிடங்களில் ஆதார் அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய முடியும். 15 நிமிடங்களுக்குப் பிறகு முன்பதிவு சாதாரண நிலைக்குத் திரும்பும். பதிவு செய்துள்ள அனைத்துப் பயனாளர்களும் டிக்கெட் புக் செய்யலாம். பி.ஆர்.எஸ். நேரடி கவுண்டர்களில் முன்பதிவு செய்வதற்கான நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களுக்கு தட்கல் முன்பதிவில் ஏற்கனவே உள்ள 10 நிமிடக் கட்டுப்பாடு தொடரும்; பொது முன்பதிவிலும் முதல் 10 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரயிலுக்கான சாதாரண முன்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கினால், முதல் 15 நிமிடங்களுக்கு (10:00 முதல் 10:15 வரை) ஆதார் இணைக்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியும்.முன்னதாக, தட்கல் முன்பதிவுகளுக்கு இதேபோன்று 15 நிமிடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. “அந்த உத்தரவின் பலன்களைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்தச் சலுகையைச் சாதாரண முன்பதிவுகளுக்கும் நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் முக்கிய நோக்கம், போலி டிக்கெட் தரகர்களைத் தடுத்து, அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதற்கான மொத்த முன்பதிவுகளைக் குறைப்பதாகும். இது வெளிப்படையான முன்பதிவு அனுபவத்தை உறுதி செய்கிறது.ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குடன் ஆதார் இணைப்பது எப்படி?முதல் 15 நிமிட சலுகையைப் பெற விரும்பும் பயணிகள், இன்று முதல் தங்கள் ஆதார் எண்ணை ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான எளிய வழிமுறைகள்:படி 1: உங்க ஐ.ஆர்.சி.டி.சி. அக்கவுண்ட்டில் உள்நுழையவும்.படி 2: ‘My Profile’ என்ற பிரிவுக்குச் செல்லவும்.படி 3: ‘Aadhaar Authentication’ (ஆதார் அங்கீகாரம்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.படி 4: உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.படி 5: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி-ஐ உள்ளிட்டுச் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்.சரிபார்ப்புச் சிக்கல்களைத் தவிர்க்க, பயணிகளின் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு விவரங்கள் ஆதார் விவரங்களுடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை, ரயில்வே முன்பதிவு முறையை நியாயமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
