இலங்கை
இடமாற்றங்களை நிராகரிப்பதில் கல்வித்துறையினர் முன்னிலை; பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டு!
இடமாற்றங்களை நிராகரிப்பதில் கல்வித்துறையினர் முன்னிலை; பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டு!
கல்வித்துறை சார்ந்தோரே இடமாற்றங்களை நிராகரிப்பதில் முன்னிலையில் உள்ளனர். இடமாற்றங்களுக்கு இணங்காத பொதுச்சேவையில் உள்ள ஒரே துறையாக இது மாறியுள்ளது. அந்தவகையில் ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களைச் சமநிலைப்படுத்துவது துரிதப்படுத்தப்படவேண்டும் என்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத் தில் அவர் இதனைத் தெரிவித்தார். இடமாற்றங்களுக்கு இணங்கத் தவறிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பது தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைவாக அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துத் துறைகளுக்கும் ஒரு ஒதுக்கீட்டு முறைமையின் அடிப்படையில் இந்தக் கொள்கை செயற்படுத்தப்படுவதுடன், இயலாமையுடைய மாணவர்களுக்குத் தகுதி அடிப்படையிலான மாவட்ட ஒதுக்கீட்டு முறைமையின் மூலமாகவும் அனைத்துத் துறைகளுக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது. அதேவேளை பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் கல்வி தொடர்பான பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
