வணிகம்
லாபத்தை அள்ளிக் கொடுக்கும் தங்கம் முதலீடு… 8 மாதத்தில் 36.94% விலை உயர்வு: மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் ஓரமா போங்க!
லாபத்தை அள்ளிக் கொடுக்கும் தங்கம் முதலீடு… 8 மாதத்தில் 36.94% விலை உயர்வு: மியூச்சுவல் ஃபண்ட் எல்லாம் ஓரமா போங்க!
”விண்ணை முட்டும் விலை” ”வரலாறு காணாத உயர்வு””வரலாற்றில் புதிய உச்சம்”சமீப நாட்களாக இதுபோன்ற செய்திகளை தினந்தோறும் கேட்கிறோம். இவையெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றை தான். அது தினமும் உயர்ந்து வரும் தங்கம் விலை. இந்தியாவில் தங்கம் முதலில் ஆபரணங்களாக விரும்பப்பட்டது. பின்னர் அவசர செலவுகளுக்கான சேமிப்பாக பார்க்கப்பட்டது. தற்போது அதிக லாபம் தரும் முதலீடாக உயர்ந்துள்ளது. தங்கம் முதலீடாக மாறியதற்கு முக்கிய காரணம் நாளுக்கு உயர்ந்து வரும் அதன் மதிப்பு தான். தங்கம் விலை உயர்வுக்கு உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, உக்ரைன் – ரஷ்யா முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் வரையிலான போர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக சிக்கல்கள் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே உயர்ந்து வந்தாலும், 2025 ஆம் ஆண்டு அதன் உச்சமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை தங்கம் விலை கிட்டதட்ட 40% உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 8 மாதங்களில் 36.94% உயர்ந்துள்ளது.22 கேரட் தங்கம் விலை கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி கிராமுக்கு ரூ. 7945 ஆகும். மார்ச் 6 ஆம் தேதி கிராமுக்கு ரூ. 8020 ஆக உயர்ந்தது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் விலை ஏப்ரல் 4 ஆம் தேதி கிராமுக்கு ரூ.8400 ஆக உயர்ந்து. மேலும் மே 6 ஆம் தேதி இன்னும் உயர்ந்து கிராமுக்கு ரூ. 9025 ஆக மாறியது. ஆனால் அடுத்த 3 மாதங்கள் தங்கம் விலையில் பெரிய உயர்வு இல்லை, இன்னும் சொல்லப்போனால் ஏற்ற இறக்கமாக இருந்தது. ஜூன் 4 ஆம் தேதி ரூ. 9090 ஆகவும், ஜூலை 4 ஆம் தேதி சற்று குறைந்து ரூ. 9050 ஆகவும் இருந்தது. அடுத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி சற்று அதிகரித்து ரூ. 9150 ஆக மாறியது. அதேநேரம் செப்டம்பர் 8 ஆம் தேதி கணிசமாக அதிகரித்து ரூ. 9935 ஆக உயர்ந்தது. இப்படியாக ரூ. 7945 இலிருந்து 8 மாதங்களில் ரூ. 9935 ஆக உயர்ந்து, தங்கம் விலை 36.94% அதிகரித்துள்ளது. இந்த தொடர்ச்சியான விலை உயர்வு தங்கத்தை சிறந்த முதலீடாக மாற்றியுள்ளது. தற்போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மியூச்சுவல் ஃபண்ட்களை விட தங்கம் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட்களை பொறுத்தவரை தொடர்ச்சியான முதலீடு தேவை. லாபத்தை அறுவடை செய்ய நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். மேலும் ஆபத்துகளும் (ரிஸ்க்) அதிகம். அதேநேரம் தங்கத்தை பொறுத்தவரை பணம் இருந்தால், விரும்பினால் வாங்கி சேமித்துக் கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் எளிதாக ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட்களை ஒப்பிடுகையில் ஆபத்துகளும் குறைவு. இதன் காரணமாகவும் தொடர்ச்சியான விலை உயர்வின் காரணமாகவும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. தங்கத்தில் முதலீடு என்பது நிஜ தங்கத்தை (இயற்பியல் தங்கம்) வாங்குவதுடன் மட்டும் நிற்கவில்லை. கோல்ட் ஈ.டி.எஃப் (Gold ETF) போன்ற மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.பொருளாதார நிபுணர்கள் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறி வருகின்றனர். அதற்கு ஏற்ப செப்டம்பர் 8 ஆம் தேதி ரூ. 9935 ஆக இருந்த தங்கம் விலை இன்று (அக்டோபர் 2) ரூ. 10950 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் நல்ல லாபம் தரும் முதலீடாக முதலீட்டாளர்களால் பார்க்கப்படுகிறது.
