நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 06/12/2024 | Edited on 06/12/2024

தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருக்க மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றிருந்த நிலையில், நேற்று(05.12.2024) நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது.  

இப்படத்தின் ஒரு காதல் காட்சியில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு மொபைல் நம்பரை துண்டு சீட்டில் கொடுப்பார்.  அந்த காட்சியில் இடம்பெற்றுள்ள சாய்பல்லவியின் மொபைல் நம்பர் தன்னுடையது என்று சென்னையைச் சேர்ந்த வாகீசன் என்ற மாணவர் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் அந்த நம்பருக்கு பலரும் கால் செய்ததால் மன உளைச்சலுக்கு அவர் ஆளானதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ராஜ்குமார் பெரியசாமிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சோசியல் மீடியா வாயிலாக இந்த தகவலைச் சொல்ல அந்த மாணவர் முற்பட்டுள்ளார். 

Advertisement

அதன் பின்பு அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வராததால் ரூ.1 கோடியே 10 லட்சம், நஷ்ட ஈடு கேட்டு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நோட்டீஸூக்கும் பதில் வராததால் படக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு வந்த பல பல தொலைப்பேசி அழைப்புகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக படக்குழு கொடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமரன் திரைப்படம் நேற்று ஓ.டி.டி.-யில் வெளியாகி இருக்கும் சூழலில், அந்த மாணவர் கொடுத்திருந்த மனுவுக்கு தற்போது நீதிமன்றத்தில் படக்குழு பதிலளித்துள்ளது. அதன்படி மாணவரின் மொபைல் நம்பர் இடம்பெற்ற காட்சியைப் படக்குழு நீக்கியுள்ளதாகவும் அந்த காட்சியை நீக்கியோடு புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் படக்குழு பதிலளித்துள்ளனர்.