இலங்கை
அநுர அரசின் ஆட்சியிலேயே மக்களுக்கு முழுச்சுதந்திரம்; ஆளுங்கட்சி தெரிவிப்பு!
அநுர அரசின் ஆட்சியிலேயே மக்களுக்கு முழுச்சுதந்திரம்; ஆளுங்கட்சி தெரிவிப்பு!
எமது அரசாங்கத்தின் ஆட்சியிலேயே மக்களுக்குப் பூரண சுதந்திரம் கிடைத்துள்ளது. நினைவேந்தல்களை நடத்த, கருத்துகளை வெளியிட போராட்டங்களை நடத்தவென பூரணமான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரமும் முன்னரை விடத் தற்போது அதிகமாகக் கிடைத்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார காலமாக தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நினைவிடத்துக்குச் சென்ற என்னைச் சிலர் தடுத்தனர். இறுதிநாள் நிகழ்வில் ஒருவர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளார். இதற்கு அரச தரப்பினர் காரணம் என்று தேசியவாதிகள் சிலர் நினைக்கின்றனர். இந்தச் சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. கடந்த காலங்களைப் போன்று புலனாய்வுப் பிரிவினராலும், இராணுவத்தினராலும், பொலிஸாராலும் நினைவேந்தல்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. ஆனால் சிலர் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை எதிர்க்கின்றனர். அரசாங்கத்தின்மீது பழிபோடுகின்றனர் – என்றார்.
