பொழுதுபோக்கு
சாமி… என்ன விட்டுடுங்க, சினிமாவே வேண்டாம்; கெஞ்சி கேட்ட தனுஷ், விடாமல் திட்டிய செல்வராகவன்: கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!
சாமி… என்ன விட்டுடுங்க, சினிமாவே வேண்டாம்; கெஞ்சி கேட்ட தனுஷ், விடாமல் திட்டிய செல்வராகவன்: கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!
இன்றைய தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷ் தனது முதல் 5 படங்கள் முடியும் வரை நடிப்பு பிடிக்காமலே நடித்து ஹிட்டாக்கியுள்ளார் என்று அவரது அப்பா கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தனுஷின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.அடுத்து தனுஷுன் 3-வது படமாக வெளியான திருடா திருடி, தமிழ் சினிமாவில் அந்த வரும் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது. அதன்பிறகு தேவதையை கண்டேன், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, பொல்லாதவன், அசுரன், ஆடுகளம் என பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ், இயக்குனராக பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என 4 படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார்.தற்போது இவரது இயக்கத்தில் வெளியான இட்லி கடை திரைப்படம் பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வரும் தனுஷ் நடிப்பதில் இன்ட்ரஸட் இல்லாமல் தான் ஒரு செஃப் ஆக வேண்டும் என்று தான் விரும்பியதாக அவரின் அப்பா கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.பிகைண்ட்வுடஸ் சேனலில் பேசிய அவர், துள்ளுவதோ இளமை படத்தின் கதையை நான் எழுதி ஒரு கம்பெனிக்கு விற்றுவிட்டேன். அதை அவர்கள் புத்தகமாக வெளியிட்ட போது, செல்வராகன் அந்த புத்தகத்தில் என் பெயர் இருப்பதை பார்த்து வாங்கி வந்து , இந்த கதை நல்லாருக்கு டாடி இதை ஏன் நீங்க படமாக எடுக்க கூடாது என்று கேட்டான். நான் கிராமத்து கதைகள் தான் பண்ணிருக்கேன் இரு நமக்கு செட் ஆகாது என்று சொன்னேன். ஆனாலும் இதை எடுக்க வேண்டும் என்று உறுதியாக சொன்னார்.ஒரு கட்டத்தில் இதை நாமளே படமாக்கினால் என்ன என்று எனக்கு தோன்றியது. அதற்கான பணிகளை தொடங்கினோம். அப்போது படத்தில் மகேஷ் கேரக்டரில் நடிக்க கிட்டத்தட்ட 100-150 பசங்களை பார்த்தோம். அதில் உதய் கிரன் செட் ஆனார். அவரிடம் கதை சொல்லி அவரும் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்க இருந்த ஒரு நிறுவனம் அக்ரிமெண்ட் இருக்கிறது. அவரை வைத்து படம் நீங்கள் எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.ஒருமுறை, வீட்டில் இருந்து தனுஷ், பள்ளிக்கு செல்வதை பார்த்து இவனே சரியாக இருப்பானே என்று யோசித்து வீட்டில் சொன்னேன். அவர்கள் எல்லாம் ஒன்று கூடி, அவன் வாழ்க்கையை கெடுத்துவிடாதீங்க என்று சொன்னார்கள். இவனும், எனக்கு சினிமாவே வேண்டாம் என்று சொன்னான். ஆனால் பள்ளி விடுமுறை சமயத்தில் ஷூட்டிங் வைக்கலாம் என்று சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். ஆனால் ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக படத்தை முடிக்க முடியவில்லை. 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.அப்போது ஒரு கிராமத்து படம் இயக்க வாய்ப்பு வந்தது, பணத்தேவை காரணமாக அந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டதால், சினிமா ஆசையில் இருந்த செல்வாவிடம் மீதமுள்ள ஷூட்டிங்கை முடிக்க சொன்னேன். ஆனால் அவன் நான் எடுத்த எல்லாத்தையும் விட்டுவிட்டு புதிதாக ஒரு படம் எடுத்தான். அதுதான் நீங்கள் இப்போது பார்க்கும் துள்ளுவதோ இளமை. அதன்பிறகு செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தில், தனுஷ் நடித்தான். ஸ்பாட்டில் யார் தவறு செய்தாலும், செல்வா தனுஷை தான் திட்டுவான்.தனுஷ் வீட்டுக்கு வந்து சினிமா எனக்கு வேண்டாம்மா, யார் தப்பு பண்ணாலும் இவன் என்னையே திட்டுகிறான் என்று சொல்வான், குடும்பத்திற்காக தான் செல்வா இப்படி செய்கிறான் என்று நாங்கள் தனுஷை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தோம். சுள்ளான் படம் வரைக்குமே தனுஷ்க்கு நடிக்க விருப்பமே இல்லை என்று கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
