வணிகம்
அடுத்த எல் & டி இந்த கம்பெனிதான்: ரூ.1 லட்சம் கோடி ஆர்டரை தட்டித் தூக்கிய பொறியியல் நிறுவனம்
அடுத்த எல் & டி இந்த கம்பெனிதான்: ரூ.1 லட்சம் கோடி ஆர்டரை தட்டித் தூக்கிய பொறியியல் நிறுவனம்
இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் லார்சன் & டூப்ரோவின் (எல் &டி) வளர்ச்சிப் பாதையை, இப்போது சிறிய நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) வேகமாக கடைப்பிடித்துவருகிறது. ரயில்வேயின் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்த நிறுவனமாக இருந்த ஆர்.வி.என்.எல், தற்போது ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான ஆர்டர் புத்தகத்துடன் (Order Book) ஒரு முழுமையான பொறியியல் நிறுவனமாக உருவெடுத்து வருகிறது.ஆர்.வி.என்.எல்-லின் ஆர்டர் புக் தற்போது அதன் வருவாயைப் போல கிட்டத்தட்ட 4 மடங்கு உயர்ந்து ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முன்பு ரயில்வே அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்து வந்த ஆர்.வி.என்.எல்-லின், இப்போது மெட்ரோ திட்டங்கள், நெடுஞ்சாலைகள் (Hybrid-Annuity), துறைமுக இணைப்புப் பணிகள் மற்றும் பாரத்நெட் தொலைத்தொடர்பு ஃபைபர் பணிகள் எனப் பல்வகைப்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், ஆர்.வி.என்.எல். வெளிச் சந்தைத் டெண்டர்களில் (Open-Market Tenders) போட்டியிடத் தொடங்கியுள்ளது. தற்போது அதன் மொத்த ஆர்டர்களில் பாதிக்கும் மேல் போட்டி ஏலங்கள் மூலம் கிடைத்தவை. இது, “எதைச் செய்யச் சொல்கிறார்களோ அதை செய்வது” என்ற நிலையிலிருந்து, “எதைச் செய்ய வேண்டும் என்று தேர்வு செய்வது” என்ற மனமாற்றத்தை குறிக்கிறது.ஆர்.வி.என்.எல், வேகமான வளர்ச்சியிலும் ஸ்திரத்தன்மையைத் தியாகம் செய்யவில்லை. அதன் செயல்பாட்டு இலாப வரம்பு (Operating Margin) 5% முதல் 6% வரை நிலையாக உள்ளது. இது L&T-ன் 13% இலாப வரம்பை விடக் குறைவாக இருந்தாலும், ஒரு EPC (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்) நிறுவனத்திற்கு இது மரியாதைக்குரியது. எதிர்காலத்தில் மெட்ரோ, சர்வதேச EPC பணிகள், சூரிய சக்தி திட்டங்கள் மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் (Vande Bharat sleeper train) திட்டத்தின் உற்பத்திப் பகுதி ஆகியவை அதிக இலாப வரம்புகளை (Margin) ஈட்ட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆர்.வி.என்.எல். எளிய இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளிலிருந்து, இப்போது நகர்ப்புற மெட்ரோ, பல-வகை போக்குவரத்து வழித்தடங்கள் போன்ற சிக்கலான திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இதற்காக அது புதிய வடிவமைப்புத் திறன்களை மேம்படுத்தி, கூட்டு நிறுவனங்களை (Joint Ventures – JVs) அமைத்துள்ளது. அதிவேக வளர்ச்சி இருந்தபோதிலும், நிறுவனம் தனது பரவலாக்கப்பட்ட அமைப்பு மற்றும் டிஜிட்டல் கண்காணிப்புக் கருவிகள் மூலம் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து, நிர்வாகச் சுமையின்றி (Bloat) பணிகளைச் செய்து வருகிறது.எல் & டி பல தசாப்தங்களாகக் கொண்டு வந்த பல்வகைப்படுத்தல் மற்றும் நிபுணத்துவத்தை, ஆர்.வி.என்.எல். சில ஆண்டுகளில் சுருக்க முயற்சி செய்கிறது. இது கூட்டு நிறுவனங்கள் மூலம் புதிய துறைகளான ரோலிங் ஸ்டாக் பராமரிப்பு, அணுசக்தி கூட்டு (Rosatom உடன்) வெளிநாட்டு EPC திட்டங்களில் நுழைகிறது. இந்த ஆண்டு ரூ.30,000 முதல் ரூ.35,000 கோடி வரையிலான வெளிநாட்டுப் பணிகளுக்கு ஏலம் கோர ஆர்.வி.என்.எல். திட்டமிட்டுள்ளது.2024-25 நிதியாண்டில் ஆர்.வி.என்.எல்-லின் வளர்ச்சி எதிர்பார்ப்பை விடக் குறைவாக இருந்தது. இதற்குக் காரணம் கட்டமைப்புப் பிரச்சினை அல்ல, மாறாக புதிய திட்டங்களுக்கான வடிவமைப்பு, நில அனுமதி மற்றும் ஒப்புதல்கள் தாமதமானதே. Q1FY26-ல் EBITDA இலாப வரம்பு 1.4% ஆக குறைந்தது. இது, நிலையான விலை ஒப்பந்தங்கள் (Fixed-Price Contracts) மற்றும் புதிய திட்டங்களுக்கான தொடக்கநிலை செலவுகள் காரணமாக ஏற்பட்டது. எனினும், நிர்வாகம் செயல்பாட்டு தீவிரம் அதிகரிக்கும்போது, ஆண்டின் 2-ம் பாதியில் இலாபத்தன்மை சீராகும் என எதிர்பார்க்கிறது.மத்திய அரசின் உள்கட்டமைப்புச் செலவினங்களின் மையத்தில் RVNL இருப்பதால், அதன் ₹1 லட்சம் கோடி ஆர்டர் புக் பல ஆண்டுகளுக்குப் பணி உத்தரவாதத்தை அளிக்கிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் திட்டத்தின் முதல் முன்மாதிரி (Prototype) ஜூன் 2026-ல் வெளிவரும். 2032-க்குள் 120 ரயில்களை முழுமையாகச் செயல்படுத்தும்போது வருவாய் கணிசமாக உயரும். இத்திட்டங்களின் அளவு மற்றும் சிக்கலான தன்மை அதிகரிக்கும்போது, RVNL-ன் இலாப வரம்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.ஆர்.வி.என்.எல். ஒரு அரசு நிறுவனமாக (PSU) தொடங்கினாலும், இப்போது ஒரு லீன், போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் லட்சியமிக்க பொறியியல் நிறுவனமாகச் செயல்படுகிறது. L&T இந்திய பொறியியல் துறையின் முதுகெலும்பாக மாறப் பல தசாப்தங்கள் எடுத்த நிலையில், RVNL அதன் பாதையை வேகமாகக் கடந்து வருகிறது. அதன் ஆர்டர் புக், பல்வகைப்படுத்தல் மற்றும் மேம்பட்ட நிர்வாக அமைப்புகள் மூலம், இந்தியாவின் அடுத்த பெரிய உள்கட்டமைப்பு வெற்றிக் கதையை எழுதக்கூடும்.
