திரை விமர்சனம்
கல்கி – திரைவிமர்சனம்

கல்கி – திரைவிமர்சனம்
மகாபாரத போர் முடிந்து 6 ஆயிரம் வருடங்கள் கழித்து ‘கல்கி’யின் கதை தொடங்குகிறது. உலகின் முதலும் கடைசியுமான நகரமான காசியில், சுப்ரீம் யாஸ்கினின் (கமல்ஹாசன்) கொடூர ஆட்சிக்கு பயந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ‘சம்பாலா’ பகுதியில் கங்கை நதி வற்றி, கடும் பஞ்சத்தில் பசியும் பட்டினியுமாக வாழ்கின்றனர் மக்கள். ‘காம்ப்ளக்ஸ்’ பகுதியில் அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட மக்கள் வசிக்கின்றனர். காம்ப்ளக்ஸில் இணைந்து, பணக்காரனாக வாழ ஆசைப்படுகிறார் பைரவா (பிரபாஸ்).
காம்ப்ளக்ஸ் உலகில் கமல்ஹாசனின் கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து, அமைதியை நிலைநாட்ட விரும்பும் சம்பாலா பகுதி மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை, சுமதிக்கு (தீபிகா படுகோன்) பிறக்க இருக்கும் தெய்வக்குழந்தை. அதை வயிற்றிலேயே அழிக்க, ‘புராஜெக்ட் கே’ என்ற லட்சியத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார், கமல்ஹாசன். தெய்வக்குழந்தையை காப்பாற்றி, அந்த யுகத்தில் கிருஷ்ணர் தனக்கு விடுத்த சாபத்தில் இருந்து, இந்த யுகத்தில் விமோசனம் பெற அஸ்வத்தாமன் (அமிதாப் பச்சன்) முயற்சி செய்கிறார்.
தெய்வக்குழந்தை மூலமாக ‘காம்ப்ளக்ஸ்’ கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார், பிரபாஸ். முடிவு என்ன என்பது மீதி கதை. கமல்ஹாசனின் லட்சியம் என்ன ஆகிறது என்பதை இனி 2ம் பாகம் சொல்லும். இனி ஹாலிவுட் படவுலகம், இந்தியப் படவுலகை மேற்கோள் காட்டி பேச வேண்டும். அந்தளவுக்கு இப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பிரமாண்டமாக, பிரமிக்க வைப்பதாக, நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த டீமுக்கு ஹாட்ஸ்ஆஃப்.
புராணக்கதையை சயின்ஸ் பிக்ஷன் வடிவில், நேர்த்தியான திரைக்கதையின் மூலம் கொடுத்துள்ள இயக்குனர் நாக் அஸ்வினுக்கு பாராட்டுகள். முதல் பாக ஹீரோ, ஆஜானுபாகு அமிதாப் பச்சன். அஸ்வத்தாமன் கேரக்டரே அவரால்தான் உயிர் பெறுகிறது. அடுத்த அசத்தல், சுப்ரீம் யாஸ்கின் கேரக்டரில் மாறுபட்ட தோற்றத்தில் கலக்கியிருக்கும் கமல்ஹாசன். 2வது பாகத்தில் அவர் விஸ்வரூபம் எடுப்பார் போலிருக்கிறது. அமிதாப் பச்சனுடன் மோதும் சண்டைக் காட்சியிலும், அதிநவீன வாகனம் புஜ்ஜியுடன் லந்து செய்யும் காட்சிகளிலும் பிரபாஸ் முத்திரை பதிக்கிறார்.
புஜ்ஜிக்கு டப்பிங் பேசிய கீர்த்தி சுரேஷ், பன்ச் டயலாக் சொல்லி கலகலப்பூட்டுகிறார். தெய்வக்குழந்தையை வயிற்றில் சுமந்து பரிதாபத்தை அள்ளும் தீபிகா படுகோன், தன்னை அமிதாப் பச்சன் உள்பட ‘சம்பாலா’ மக்கள் ‘அம்மா’ என்றழைப்பதை அறிந்து உருகுவது டாப். திஷா பதானி, ஷோபனா, மிருணாள் தாக்கூர், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, அன்னா பென், பசுபதி, பிரம்மானந்தம், வங்க நடிகர் சாஸ்வதா சட்டர்ஜி, இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம்கோபால் வர்மா போன்றோர், தமது கேரக்டர் மூலம் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
குருஷேத்திர போர் காட்சிகளும் மற்றும் சம்பாலா, காம்ப்ளக்ஸ் ஆகிய உலகங்களின் அமைப்பையும், மக்களின் வாழ்வியலையும் மிகவும் தத்ரூபமாக படமாக்கி அசத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். தமிழ்ப் பதிப்பில் இடம்பெறும் வசனங்கள் ஜீவன் இல்லாமல் கடந்து செல்வது மைனஸ். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், விஷூவலை பெரிதும் நம்பி காட்சிகளை நகர்த்தினாலும், படம் பிரமிப்பு ஏற்படுத்துகிறது. [எ]