வணிகம்
கார் ஷெட்டில் தொடங்கிய கனவு… டிரில்லியன் டாலர் சாம்ராஜ்யம் கட்டியெழுப்பிய கூகுள் கதை!
கார் ஷெட்டில் தொடங்கிய கனவு… டிரில்லியன் டாலர் சாம்ராஜ்யம் கட்டியெழுப்பிய கூகுள் கதை!
இன்று ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் கூகுள் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா? ஒரு புதிய உணவைத் தேடுவது முதல், திசைகளைக் கண்டுபிடிப்பது வரை… ஒரு நொடியும் அது இல்லாமல் நகர்வதில்லை. அப்படிப்பட்ட, உலகையே ஒரு விரல் நுனியில் வைத்திருக்கும் அந்த மாபெரும் நிறுவனத்தின் கதையை தான் பார்க்கப் போகிறோம்.கார் ஷெட்டில் ஆரம்பித்த சாம்ராஜ்யம்!கூகுள் ஒரு நாள் இரவில் முளைத்த ஆலமரம் அல்ல. அது உருவானதே சுவாரசியமான கதைதான். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக்கொண்டிருந்த 2 நண்பர்கள், லாரி பேஜ் (Larry Page), செர்ஜி பிரின் (Sergey Brin) உலகளாவிய தகவல்களை ஒழுங்கமைக்க ஒருவழி தேடினர். அவர்களின் இந்தக் கனவு 1998-ம் ஆண்டு செப்.27 அன்று, கலிஃபோர்னியாவில் ஒரு சிறிய கார் ஷெட்டில் நிறுவனமாக உருவெடுத்தது. இன்று டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனம் கார் பார்க்கிங் இடத்தில்தான் தனது பயணத்தைத் தொடங்கியது.கூகோல் முதல் கூகுள் வரை! கூகுள் என்ற பெயருக்கு பின் சுவாரசியமான கணித ரகசியம் உள்ளது. எண்ணற்ற டேட்டா கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் 1-ஐத் தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களைக் குறிக்கும் ஒரு மாபெரும் கணிதச் சொல்லான “கூகோல்” (Googol) என்ற வார்த்தையைத்தான் இவர்கள் வைக்க விரும்பினார்கள். ஆனால், தவறுதலாக அவர்கள் எழுத்துப் பிழையாகப் பதிவு செய்ததுதான் இன்று உலகமே உச்சரிக்கும் “Google” என்றானது.நம்புவதற்கு கடினமாக இருக்கும், ஆனால் கூகுளின் நிறுவனர்கள் ஆரம்ப காலத்தில் தங்களது நிறுவனத்தை வெறும் $1 மில்லியன் டாலர்களுக்கு விற்க முன்வந்தனர். ஆனால், யாரும் அதை வாங்க முன்வரவில்லை. அந்த ஒப்பந்தம் இன்று நடந்திருந்தால், வாங்கியவர் உலகின் அதிர்ஷ்டசாலி ஆகி இருப்பார். கூகுளின் தலைமையக வளாகத்திற்கு “கூகுள்பிளெக்ஸ்” (Googleplex) என்று பெயர். இங்கு டைனோசர் எலும்புக்கூடு மாதிரி வைக்கப்பட்டுள்ளது. அதன் பொருள், காலப்போக்கில் நாம் மறைந்துவிடக் கூடாது என்று ஊழியர்களுக்கு நினைவூட்டுவதாம்.கூகுள் நிறுவனம் சம்பாதிக்கும் பணம் மலைபோல் குவிகிறது. கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட் (Alphabet Inc.) ஆகும். சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆல்பபெட் நிறுவனம் ஒரே ஒரு காலாண்டில் மட்டும் $96.5 பில்லியன் டாலருக்கும் (சுமார் ₹8 லட்சம் கோடிக்கும் மேல்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளது. இதில் 80%க்கும் அதிகமான வருமானம் விளம்பரங்கள் மூலம் வருகிறது. நீங்க கூகுளில் தேடும்போது அல்லது யூடியூப் வீடியோ பார்ப்பதற்கு முன் வரும் விளம்பரங்கள்தான் இந்த மாபெரும் வருமானத்தின் ரகசியம்.கூகுள் என்றால் வெறும் தேடுபொறி மட்டுமல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனை தளங்களையும் உருவாக்கிய ஒரு தகவல் இயந்திரம். கூகுள் நிறுவனத்திடம் இன்று 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஓ.எஸ், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், க்ரோம் ப்ரௌசர், கூகுள் க்ளவுட், பிக்சல் போன்கள்…என நீண்டு கொண்டே போகும் இந்தப் பட்டியல், உலகை தொழில்நுட்ப ரீதியாகக் கட்டிப் போட்டுள்ளது.வீடியோ உலகின் மன்னனான யூடியூப் (YouTube) கூகுளின் சாம்ராஜ்யத்தில் தான் உள்ளது. யூடியூப் வெறும் ஒரு வருடம் மட்டுமே வயதுடையதாக இருந்தபோது, அதாவது 2006-ம் ஆண்டில், கூகுள் நிறுவனம் அதனை $1.65 பில்லியன் டாலர் என்ற மாபெரும் தொகைக்கு வாங்கியது. இன்று, யூடியூப் கூகுளின் மிக முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகும்.ஒரு வினாடிக்கு 2 மில்லியன் தேடல்கள்! உலகம் முழுவதும் கூகுளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கற்பனைக்கும் எட்டாதது. இதை ஒரு நாளைக்கு இவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், ஒரு நொடியில் எத்தனை தேடல்கள் நடக்கிறது என்று பார்க்கலாம்.உலகெங்கிலும் ஒரு வினாடிக்கு சுமார் 2 மில்லியன் (20 லட்சம்) தேடல்களுக்கு மேல் கூகுளில் நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளில் பல பில்லியன் (பல நூறு கோடி) தேடல்களை கூகுள் தனியாளாக கையாண்டு வருகிறது. இப்படி, ஒரு கார் ஷெட்டில் தொடங்கிய ஒரு யோசனை, இன்று உலகின் மிகப்பெரிய தகவல் சாம்ராஜ்யமாக வளர்ந்து, நம் ஒவ்வொரு நொடியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. தொழில்நுட்ப அற்புதத்திற்கு கூகுளை விட சிறந்த உதாரணம் வேறு ஏதுமில்லை!
