இலங்கை
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம்; அஜித் பி பெரேரா தெரிவிப்பு!
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம்; அஜித் பி பெரேரா தெரிவிப்பு!
மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும். அதற்குரிய தேசிய, சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆளுநர்களின் ஆட்சிக்குப் பதிலாக மக்கள் பிரதி நிதித்துவம் மாகாணசபையில் நிலைநிறுத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்தப்படவேண்டியது ஜனநாயகப்பண்பாகும். அதற்குரிய ஏற்பாட்டை நாடாளுமன்றம் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.
எது எப்படி இருந்தாலும் புத்தாண்டுக்குப் பின்னர் மே அல்லது ஜூன் மாதமளவில் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியமே அதிகம் உள்ளது. அதற்குரிய அழுத்தம் தேசிய, சர்வதேச ரீதியில் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலைப் பின்னடித்தால் அது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும். மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை முன்வந்துள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பார்கள். நாட்டு மக்களும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்த்துள்ளனர் – என்றார்.
