பொழுதுபோக்கு
‘ஹஸ்பெண்ட்… நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’: மாதம்பட்டி அறிக்கைக்கு ஜாய் கிரிஸில்டா பதிலடி
‘ஹஸ்பெண்ட்… நீங்க ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’: மாதம்பட்டி அறிக்கைக்கு ஜாய் கிரிஸில்டா பதிலடி
பிரபல சமையல் கலை நிபுணரும், தமிழ் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநில மகளிர் ஆணையம் எனப் பல தளங்களில் புகார் அளித்த நிலையில், தற்போது நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துப் பல்வேறு பரபரப்புக் குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைத்தது இச்சம்பவத்தின் வீரியத்தை அதிகரித்தது. தனது தரப்பு நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விதமாக மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பியுள்ள தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பலர் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்து, உண்மை நிலைநாட்டப்படும். இந்தச் சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்காக நான் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட நான் விரும்பவில்லை. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்தவிதமான கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படியே எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்,” என்று மாதம்பட்டி ரங்கராஜ் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மாதம்பட்டி ரங்கராஜின் ஒரு பக்க அறிக்கைக்கு ஜாய் கிரிஸில்டா ஒரு வரியில் பதிலடி கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டா கணக்கில் மாதம்பட்டி ரங்கராஜின் அறிக்கையை பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா ”ஹலோ கண்வர் மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் நீங்க காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வாங்க. சட்டம் தன் கடமையை செய்யும்” என்று குறிப்பிடிருந்தார். மற்றொரு பதிவில் சட்டத்திற்கு முன் நீங்கள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
