இலங்கை
ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம்!
ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம்!
மேன்முறையீட்டுக் காலமும் நீடிப்பு; வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
ஆசிரிய இடமாற்றங்களில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும், மேன்முறையீடு செய்ய முடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டுக் காலத்தை எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆசிரிய இடமாற்றங்களில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரிய இடமாற்றக் கொள்கையை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் வடமாகாண ஆசிரியர்கள் சிலர் கடந்த சில நாள்களாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஆளுநர் நேற்று நடத்தினார். இதன்போதே, இடமாற்றங்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
ஆசிரியர்களால் மேன்முறையீடு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அவை தொடர்பில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
