விளையாட்டு
81 ஆவது சதத்தை விளாசிய விராட் கோலி!

81 ஆவது சதத்தை விளாசிய விராட் கோலி!
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்திய மண்ணில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, அவுஸ்திரேலியாவில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசி கம்பேக் கொடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
தற்போது 2 ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். விராட் கோலி களமிறங்கிய பின் அடுத்தடுத்து ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய மூவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்திய அணி நல்ல முன்னிலை பெற்றாலும், 3 ஆவது நாள் முழுக்க துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. அதற்கான முழு பொறுப்பையும் விராட் கோலி கையில் எடுத்து கொண்டார். வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என்று இரு தரப்பையும் மிகவும் சாதாரணமாக விராட் கோலி கையாண்டு ஓட்டங்களை குவித்தார்.
விராட் கோலி 90 ரன்களை கடந்து களத்தில் நிற்க, அவர் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்னொரு பக்கம் இந்திய அணியும் டிக்ளேர் செய்யும் திட்டத்திற்கு இறங்கி வந்தது.
தொடர்ந்து லபுஷேன் பவுலிங்கில் பவுண்டரியை விளாசிய விராட் கோலி, 143 பந்துகளில் தனது சதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன்பின் இந்திய அணி 486 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 534 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 81 ஆவது சதம் இதுவாகும்.