உலகம்
எரிவாயுக் கப்பலில் தீ விபத்து!
எரிவாயுக் கப்பலில் தீ விபத்து!
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அருகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எரிவாயு சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அதில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 23 பேர் உட்பட அனைத்துப் பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேமரூன் நாட்டுக் கொடியுடன் இயங்கும் ‘எம்.வி. பால்கன்’ என்ற இந்தச் சரக்குக் கப்பல், ஏமன் துறைமுகத்திலிருந்து சரக்கை இறக்குமதி செய்த பின்னர், ஜிபோட்டியின் கடற்படை தளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 113 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெடிப்புடன் தீ விபத்து ஏற்பட்டது. மசகு எண்ணெய் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டாலும், கப்பலில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) ஏற்றப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை மிஷன் தெரிவித்துள்ளது.
இந்தத் தீ விபத்தில் கப்பலின் சுமார் 15 சதவீதம் எரிந்ததுடன், கப்பலில் மேலும் வெடிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததால், ஏனைய கப்பல்கள் பாதுகாப்பான தூரத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஜிபோட்டியின் கடற்படை பாதுகாப்புப் படையினர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை பாதுகாப்பு குழுமத்தினர் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கப்பலில் பணியில் இருந்த இந்திய மாலுமிகள் 23 பேர் உட்பட மொத்தம் 26 பேர் கொண்ட குழுவினரில், அருகிலுள்ள வணிகக் கப்பல்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களில் ஒருவர் காணாமல்போனதாக முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் சிகிச்சைக்காக ஜிபோட்டியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. தீயை அணைக்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், இந்த விபத்து தொடர்பாகக் குழப்பம் நீடித்தது.
இருப்பினும், ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்தச் சம்பவத்தில் ஏவுகணைகளோ அல்லது ஆளில்லா விமானங்களோ (drones) பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இது ஹவுதி இலக்குகளுடன் பொருந்தவில்லை என்றும் பிரிட்டனின் கடல்சார் பாதுகாப்புக் குழு (Ambrey) தெரிவித்துள்ளது. ஹவுதி குழுவும் இந்தச் சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஏடன் வளைகுடா கடற்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
