இலங்கை
நிலத்தகராறு காரணமாக 30 மாடுகள்மீது வாள்வெட்டு; கிண்ணியாவில் கொடூரம்!
நிலத்தகராறு காரணமாக 30 மாடுகள்மீது வாள்வெட்டு; கிண்ணியாவில் கொடூரம்!
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கிண்ணியாப் பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நிலத்தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் கிண்ணியா குரங்கு பாஞ்சான் இரட்டைக்குளம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது.
சுமார் 2876 ஹெக்ரேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28ஆம் திகதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.
எனினும் இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநலசேவை நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர்ச் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையிலேயே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
