இலங்கை
தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை வலுக்கடாயமாக கடத்திய கணவன் !
தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை வலுக்கடாயமாக கடத்திய கணவன் !
பேருவளையில் வெள்ளை வேனில் முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் தனது மனைவி கடத்திய கணவர் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடத்தப்பட்ட பெண்ணின் தாய் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பேருவளை, கரந்தகொட, தினாவத்தையைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
தனது கணவருடனான தகராறு காரணமாக தனது மகள் பல மாதங்களாக தனது வீட்டில் தங்கியிருப்பதாக பெண்ணின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில், மகளின் கணவர் மற்றொரு குழுவுடன் வந்து, தனது மகளை வலுக்கட்டாயமாக வேனில் இழுத்துச் சென்றுவிட்டதாக அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அங்கு வந்த குழு முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்களிடம் கைத்துப்பாக்கி மற்றும் கத்தி இருந்ததாகவும் கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வடக்கு களுத்துறையின் பெல்பொல பகுதியில் உள்ள சந்தேக நபரான கணவரின் வீட்டை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர், பொலிஸார் சந்தேக நபரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, அவர் தனது மனைவியிடம் தொலைபேசியை கொடுத்தார்.
தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனது கணவருடன் இருப்பதாகவும், 22 ஆம் திகதி பொலிஸாருக்கு வந்து வாக்குமூலம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், வாக்குமூலம் அளிக்க வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், 22 ஆம் திகதி இந்த தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் வரவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சம்பவம் குறித்து பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
