பொழுதுபோக்கு
‘புரோ கோட்’ டைட்டில்… ரவி மோகன் படத்துக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி தடை
‘புரோ கோட்’ டைட்டில்… ரவி மோகன் படத்துக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி தடை
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரும், ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனருமான ரவி மோகனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில், ‘புரோ கோட்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து, நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த இண்டோ ஸ்பிரிட் பெவரேஜஸ் என்ற மதுபான நிறுவனம், ‘புரோ கோட்’ என்ற தலைப்பைத் தங்கள் திரைப்படத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்று ரவி மோகன் ஸ்டுடியோஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. ‘புரோ கோட்’ என்பது தங்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை என்றும், திரைப்படத்திற்கு அதே தலைப்பைப் பயன்படுத்துவதால் தங்களது வர்த்தக உரிமைகளுக்குச் சேதம் ஏற்படக்கூடும் என்றும் அந்த நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.இந்த வழக்கில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையில், சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் ரவி மோகனுக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, இண்டோ ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனம் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா, ‘புரோ கோட்’ திரைப்படத்தின் தலைப்பைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.மதுபான நிறுவனத்தின் வாதமாகிய, ‘பிரபலமாக உள்ள ‘புரோ கோட்’ என்ற வர்த்தகப் பெயரைத் திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல்’ என்பது நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே பெயரில் மதுபானமும் திரைப்படமும் இருக்கும்பட்சத்தில் நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனவே, இந்தத் தடை உத்தரவு காரணமாக, ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது திரைப்படத்தின் விளம்பரங்கள் மற்றும் வெளியீட்டிற்கு ‘புரோ கோட்’ என்ற தலைப்பைப் பயன்படுத்த முடியாது.
