வணிகம்
ஆதார் அடையாள அட்டை மட்டுமே; குடியுரிமை சான்றிதழ் அல்ல – மத்திய அரசின் புதிய உத்தரவு என்ன?
ஆதார் அடையாள அட்டை மட்டுமே; குடியுரிமை சான்றிதழ் அல்ல – மத்திய அரசின் புதிய உத்தரவு என்ன?
பெரும்பாலான அத்தியாவசிய சேவைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் அட்டை இந்தியக் குடியுரிமைக்கான அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரமாகச் செயல்படுமா என்பதில் பலருக்குத் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், 12 இலக்க ஆதார் எண் ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், குடியுரிமைக்கான ஆதாரமாக பயன்படுத்த முடியாது என்றும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.அடையாளச் சான்று மட்டுமே: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஆதார் நபரின் அடையாளத்தை குறிப்பிட்டாலும், அதை குடியுரிமை அல்லது வசிப்பிடத்திற்கான (Domicile) ஆதாரமாக கருத முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் பிறந்த தேதிக்கான ஆதாரம் அல்ல என்றும், எனவே அதை “பிறந்த தேதியைத் திட்டவட்டமாக நிலைநாட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொடர்பு அமைச்சகத்தின்கீழ் வரும் தபால்துறை பிறப்பித்த சமீபத்திய உத்தரவில், அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சமீபத்திய தெளிவுரைகளைப் பொதுமக்களின் தகவலுக்கும் வழிகாட்டுதலுக்கும் அறிவிப்புப் பலகையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள் யாவை?ஆதார் இன்று பல நிதி மற்றும் அரசு தொடர்பான சேவைகளுக்கு இன்றியமையாததாகிவிட்டது. ஆதார் எண்ணை வழங்காமல் பல சலுகைகள் மற்றும் பரிவர்த்தனைகள் தற்போது சாத்தியமில்லை.வரி மற்றும் நிதி சேவைகள்: வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கு, பான் (PAN) அட்டையுடன் இணைப்பதற்கு, புதிய வங்கிக் கணக்குகள் திறப்பதற்கு, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ‘உங்கள் வாடிக்கையாளரை அறிதல்’ (KYC) சரிபார்ப்பு தேவைப்படும் முதலீடுகளுக்கு.அரசு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள்: பெரும்பாலான அரசு மானியங்கள் மற்றும் நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அவசியம். சமையல் எரிவாயுவுக்கான நேரடிப் பணப் பரிமாற்றம் (DBTL) போன்ற திட்டங்கள். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) போன்ற ஓய்வூதியத் திட்டங்கள். கல்வி உதவித்தொகைகள் மற்றும் தொழிலாளர் நலன்கள் உள்ளிட்ட பிற சேவைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது.பிற சேவைகள்: புதிய மொபைல் சிம் கார்டு வாங்குவதற்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்ற பிற சேவைகளுக்கும் ஆதார் தேவைப்படுகிறது.ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வுஇதற்கிடையில், ஆதார் விவரங்களை மாற்றியமைப்பதற்கான கட்டணங்கள் அக்.1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் முதல் கட்டண உயர்வு ஆகும். பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற மக்கள்தொகை சார்ந்த மாற்றங்களுக்கான (Demographic changes) கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி) மாற்றங்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.125 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் பதிவு, அப்டேட்டுகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். கட்டண உயர்வு என்பது ஆதார் எண் வழங்கப்பட்ட பிறகு செய்யப்படும் மாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், குழந்தைகளுக்கு 5 வயதில், 5 முதல் 7 வயதுக்குள் ஒருமுறையும், 15 முதல் 17 வயதுக்குள் ஒருமுறையும் பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம் ஆகும்.
