இந்தியா
சுரங்க பாதைகள், நீரூற்று என இயற்கை ததும்பும் பெலும் குகை…!! அப்படி என்ன ஸ்பெஷல் ?

சுரங்க பாதைகள், நீரூற்று என இயற்கை ததும்பும் பெலும் குகை…!! அப்படி என்ன ஸ்பெஷல் ?
பெலும் குகை
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ராயல்சீமா என்ற பகுதி பெரும்பாலும் அரசியல், மாகாணங்கள் மற்றும் காரசாரமான உணவுக்காக அறியப்படுகிறது. எனினும் அதையும் தாண்டி இந்த இடத்தில் குறிப்பாக கர்னூல் மாநிலத்தில் பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் ஒரு அற்புதமான இடம் ஒன்று அமைந்து உள்ளது. இந்த இடத்தில் பழங்கால கோயில்கள், சிறப்பான கட்டிடங்கள் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியமான பல பகுதிகள் அமைந்துள்ளது.
அப்படி கர்னூல் மாவட்டத்தில் அமைந்து உள்ள பல அதிசயங்களில் ஒன்றுதான் பெலும் குகைகள். இந்த குகையின் நிலத்தடியில் பல சுரங்க பாதைகள் மற்றும் அரங்குகள் அமைந்து உள்ளது. பெலும் குகைகள் இந்திய துணை கண்டத்தில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய குகையாக அமைகிறது. பூமிக்குள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மேகாலயாவில் அமைந்துள்ள கிரேம் லையாத் பிரா குகைகள் முதல் இடத்தை வகிக்கிறது.
பெலும் குகைகள் முதல்முறையாக 1884 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலத்தவரால் குறிப்பிடப்பட்டது. எனினும் மீண்டும் அது கேபர் என்ற ஜெர்மானிய நபரின் தலைமையின் கீழ் மறுமுறை கண்டுபிடிக்கப்படும் வரை பெரிய அளவில் பிரபலமாகவில்லை. 1985 இல் மாநில புவியியல் துறை இந்த குகைகளுக்கான உரிமையை எடுத்துக்கொண்டது. மேலும் 1999 மற்றும் 2000 ஆண்டுக்கு இடையில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சுற்றுலாத்துறை இதனை ஒரு சுற்றுலா தளமாக உருவாக்கியது.
பெலும் குகைகள் இயற்கையின் ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. இதில் நீண்ட தூரங்களுக்கு சுரங்கபாதைகள் மற்றும் வழிகள், பாறை படிகங்கள் மற்றும் உருவாக்கங்கள் அமைந்துள்ள. இந்த குகையில் இயற்கையாக பாறையால் உருவான சிற்பங்கள், நீரூற்று மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட குளம் ஒரு சிவலிங்கம் ஆகியவை இவ்விடத்திற்கு பல சுற்றுலா பயணிகள் வருகைக்கு காரணமாக அமைகிறது.
பெலும் குகைகள் கர்னூலில் இருந்து 109 கிலோமீட்டர் தூரத்திலும், ஹைதராபாத்தில் இருந்து 336 கிலோ மீட்டர் தூரத்திலும் மற்றும் பெங்களூருவில் இருந்து 292 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த இடத்தை சாலை மூலம் கர்னூல் வாயிலாக அடையலாம். இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டிருந்தாலும் பெலும் குகைகள் சமீப சில வருடங்களாக பல சவால்களை சந்தித்து வருகிறது.
இந்த இடத்திற்கான மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு தேவையான நிதியை முந்தைய அரசு ஒதுக்காததன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போதைய அரசின் ஆதரவுடன் இந்த இடம் தற்போது புதுப்பொலிவு பெற்று தொடர்ந்து பல சுற்றுலா பயணிகளின் வருகையை உறுதி செய்கிறது.