உலகம்
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் தென் கொரியா ஜனாதிபதி!

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் தென் கொரியா ஜனாதிபதி!
‘தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை மீண்டும் அமுல்படுத்த மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவில், அடுத்த வருடம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. இதை அடுத்து தேச விரோத சக்திகளை ஒழிக்க, அவசரநிலை இராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது என ஜனாதிபதி யூன் சுக் இயோல் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தென்கொரியா பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் இராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இராணுவ ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, ஜனாதிபதி யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ”மக்களை கவலை அடைய செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இராணுவ ஆட்சி அமுல்படுத்தியதிற்கு என்னை மன்னித்து விடுங்கள் என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.