இந்தியா
“விஜய் சொன்னது 100 சதவீதம் உண்மை” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

“விஜய் சொன்னது 100 சதவீதம் உண்மை” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் கடந்த வெள்ளிக்கிழமை (6ம் தேதி) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், விசிகவின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் பங்கேற்றனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில் இருவரும் நேரடியாக அரசியல் பேசினர்.
இவர்களின் பேச்சைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த இரு தினங்களாக விசிகவை மையப்படுத்தியே பேச்சுகள் எழுந்துவருகின்றன. குறிப்பாக ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் ஆகிய இருவருமே, ‘திருமாவளவன் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மனம் முழுக்க இங்கு தான் இருக்கும்’ என பேசியிருந்தனர்.
இந்த விழாவில் விஜய், “விசிக தலைவர் தொல். திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவிற்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன். அவரின் மனம் முழுக்க இன்று நம்மோடுதான் இருக்கும்” என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விசிகவிற்கு திமுக கூட்டணியில் அழுத்தமா என பரவலாக பேச்சு எழுந்தது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக பதில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி பங்கேற்றார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியேவந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கே.பி.முனுசாமி, “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழல் வருகிறது என்றால், தவெக தலைவர் விஜய் சொன்னதுபோல், அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “தவெக தலைவர் விஜய் சொல்வது 100% உண்மை. திருமாவளவனுக்கு யாரும் நெருக்கடியை கொடுக்க முடியாது என்றாலும், மற்றவர்கள் பேசுவார்கள் என்று அடக்கி வாசிக்கிறார்.
200 தொகுதிகளில் ஜெயித்து விடுவோம் என திமுக சொல்வது தான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. நான் சவால் விடுகிறேன். 234 தொகுதிகளிலும் திமுக தனித்து நிற்க தயாரா?” எனத் தெரிவித்தார்.