இந்தியா
‘எஸ்.ஐ.ஆர்-ஐ கைவிட வேண்டும்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் இந்தியா கூட்டணி கட்சிகள் மனு
‘எஸ்.ஐ.ஆர்-ஐ கைவிட வேண்டும்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் இந்தியா கூட்டணி கட்சிகள் மனு
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) ரத்து செய்ய வேண்டும் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘முன்மொழியப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் இது தவறாக முன்மொழியப்படுவதாகவும், நோக்கத்தோடு செயல்படுத்த வெளிப்படைத் தன்மையற்றதாகவும், சர்ச்சைக்குரிய ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை’ பின்வாசல் வழியாக செயல்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவும்” இந்தியா கூட்டணி கருதுகின்ற காரணத்தால் எஸ்.ஐ.ஆ-ஐ கடுமையாக எதிர்ப்பதோடு அதனை கைவிடவும் கோருகிறோம்.மேலும், முன்மொழியப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர் மக்களின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக உள்ளது. இச்சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) கொண்டு வரப்பட்டுள்ள காலகட்டத்திலும், 2002-ஆண்டின் வாக்காளர் பட்டியலை அடிப்படை ஆவணமாகப் பயன்படுத்துவதற்கான முடிவு மற்றும் வாக்காளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள் குறித்தும் எங்களுக்கு வலுவான சந்தேகங்கள் உள்ளன.இந்நிபந்தனைகள் சிறுபான்மை சமூகங்கள், பெண்கள், ஏழைக் குடும்பங்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மற்றும் வெளிநாட்டு வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமைகளை மோசமாக பாதிக்கலாம்.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அடிப்படை ஆவணமாக 2002 வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டம் அறிவியல் பூர்வமானதல்ல, அது தேவையற்ற மற்றும் தவறான நோக்கத்துடன் முன்மொழியப்பட்டதாகும்,ஏனெனில் 2015-ம் ஆண்டிலேயே புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுமைக்கும் வாக்காளர் பட்டியலை சுத்திகரிக்கும் பணியை ஆணையமே வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவேற்றியுமுள்ளது.’விடுபடாமல் சரியான வாக்காளர்களைச் சேர்ப்பதற்காகவே செயல்படுவதாக’ இந்தியத் தேர்தல் ஆணையம் வெளிப்பார்வைக்கு கூறினாலும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’, மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களை சேர்த்தல்/ விலக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் நாங்கள் கருதும்படி உள்ளது.பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்றளவிலும் நிலுவையில் உள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசரகதியில் கொண்டு வந்தது ஏற்க இயலாது. ‘இடம் மாறுதல்’ குறித்த படிவமாகிய நான்காம் இணைப்பிற்கான தலைப்பில் “வெளி மாநிலத்திலிருந்து” என்கிற சொற்கள் இடம்பெற்றுள்ளது. இப்படி கொடுக்கப்பட்டுள்ள “வெளி மாநிலத்திலிருந்து மாற்றம்” என்கிறபடியான தலைப்பானது தெள்ளத் தெளிவாக ‘சட்டவிரோத வாக்குத் திருட்டிற்கு’ வழிவகை செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக அமைகிறது.பன்னெடுங்காலமாக நமது மாநிலத்திற்கான வசிப்பிட மாற்றம் – (குறித்த படிவத்தில் வசிப்பிட மாற்றம்’ என்கிற சொற்களை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது “வெளி மாநிலத்திலிருந்து மாற்றம்” என்கிற சொற்றொடர் முற்றிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு புறம்பானதும் மேற்சொன்னபடி ‘சட்டவிரோத வாக்குத் திருட்டிற்கு’ வழிவகைசெய்வதுமாகும்.இப்படிவத்தின் பின்புறம், படிவத்தை நிரப்புவதற்கான விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பட்டியலில், பதிமூன்றாம் எண்ணிக்கையில் வெளிமாநிலம் ஒன்றின் சிறப்பு வாக்காளர் திருத்தல் பட்டியலை குறிப்பிட்டிருப்பது முறையற்றது.இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமாகவும் எங்களது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும் உள்ளது. உண்மையில், இப்பட்டியலின் வரிசையில் ‘புதுச்சேரி மாநிலத்தின் 2002 ஆண்டின் சிறப்பு தீவிர திருத்தல் பட்டியலை’ மட்டுமே குறிப்பிட்டிருக்க வேண்டும்.தொடர்பற்ற ஒரு வெளிமாநிலத்தின் சிறப்பு தீவிர திருத்தல் பட்டியலை குறிப்பிடுவது கண்டிப்பாக “சட்டவிரோத வாக்கு திருட்டிற்கு” வழிவகை செய்யும் முயற்சியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.இதனைப் போன்றே இணைப்பு எண் மூன்றாம் (Annexure-III) படிவத்தில் காணப்பட்டுள்ள ஆவணங்கள் பட்டியலில் பிற மாநிலத்து சிறப்பு திருத்தப் பட்டியலை ஆவணமாக இணைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை “இந்தியா கூட்டணி” மறுக்கவில்லை. ஆனால், அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் அதை விடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் என்று இந்தியா கூட்டணி கருதுகின்றது.எனவே, தற்போது முன்மொழியப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) திட்டத்தினைக் கைவிட்டு அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பின்பற்றிய 2024-ஆண்டின் வாக்காளர் பட்டியலையே அனைத்து நடைமுறைகளுக்கும் கைக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
