இந்தியா
ஓராண்டாக கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! விசாரணையில் அதிர்ச்சி

ஓராண்டாக கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை! விசாரணையில் அதிர்ச்சி
சென்னை ஐனாவரத்தைச் சேர்ந்த லோடு வாகன ஓட்டுநரின் 21 வயது மகள் சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துவருகிறார். சற்று மனவளர்ச்சி மாற்றுத்திறனாளியான அந்த மாணவி தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவியின் போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த அவரது தந்தை உடனடியாக ஐனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகள் உடல் ரீதியாக பாதிப்பு அடைந்திருந்ததைக் கண்டு அவரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது மாணவி, தன்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்கள் தனது கல்லூரி தோழி மூலம் அறிமுகமானவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தந்தை அவரை உடனடியாக ஐனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால், மாணவியின் கல்லூரி சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குள் வருவதால், அங்கு சென்று புகார் கொடுக்கும்படி ஐனாவரம் போலீஸார் மாணவியின் தந்தைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது மகளை அழைத்துக்கொண்டு சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அங்கு, மாணவியிடம் போலீஸார் விசாரித்துள்ளனர்.
அப்போது மாணவி, தனது கல்லூரி தோழி மூலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரேஷ், சுரேஷ் மற்றும் சீனு ஆகிய மூன்று பேர் அறிமுகமானர். அவர்கள், யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், திருப்பூரைச் சேர்ந்த கவி, கோயம்பேட்டைச் சேர்ந்த ரோஷன், அம்பத்தூரைச் சேர்ந்த பாண்டி, திருத்தணியைச் சேர்ந்த மணி ஆகியோர் ஸ்னாப்சாட் மூலம் பழகி அவர்களும் என்னை தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கூறியுள்ளார்.
மாணவியின் வாக்குமூலத்தை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் மொத்தம் 8 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அந்த மாணவியின் தோழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கில், திருத்தணியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் மற்றும் 12-ம் வகுப்பு மாணவன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.