இந்தியா
“விசிகவில் ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை என்பதை அறிவிப்போம்” – திருமாவளவன்

“விசிகவில் ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை என்பதை அறிவிப்போம்” – திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் இன்று (8ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “விசிக திருமாவளவனின் கைக்குள் இல்லை எனும் ரீதியில் அண்ணாமலை சொல்லியிருக்கிறார்” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன், “புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்க எனது இசைவைத் தெரிவித்தேன். அந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் ஆரம்பம் முதலே அவரின் முயற்சி இருந்தது.
நீங்கள் பங்கேற்காத நிகழ்ச்சியில் நான் பங்கேற்கலாமா என்று என்னிடம் கேட்டார். அதற்கு புத்தக உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறீர்கள். அதனால், பங்கேற்கலாம். ஆனால், கவனமாக பேசுங்கள் என்று சொல்லி இருந்தேன். என் அனுமதி இல்லாமல் அவர் செல்லவில்லை. அவரைப் போகக் கூடாது என்று சொல்வது ஜனநாயகம் இல்லை.
கட்சியில் தலித் அல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவில் கலந்து ஆய்வு செய்து ஒரு முறைக்கு இரு முறை பரிசீலித்து எடுப்பதை நாங்கள் நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பேசியிருக்கிறோம். முடிவை அறிவிப்போம்.
அவர் தற்போது கட்சியில் இருக்கிறார். நாங்கள் உயர்நிலைக்குழுவில் பேசியிருக்கிறோம். அதுபற்றிய தகவல் அவருக்குத் தெரிவிக்கவில்லை. அறிவிப்பை வெளியிடுவோம்”
தொடர்ந்து, “அம்பேதகர் பேரன் நக்ஸல், அவர் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது என அண்ணாமலை பேசியிருக்கிறார்” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், “அவர் மீதான குற்றச்சாட்டு ஆதாரம் அற்றது என்பதால் தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.