இலங்கை
இலங்கையில் வேற்றுகிரகவாசிகளா? வெளியான மர்மமான கதைகள்
இலங்கையில் வேற்றுகிரகவாசிகளா? வெளியான மர்மமான கதைகள்
பொலன்னறுவை – திம்புலாகலைக்கு அருகில் அமைந்துள்ள தானிகல மலை, அதன் செழுமையான வரலாறு மற்றும் மர்மமான கதைகள் காரணமாகப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தனிமைப்படுத்தப்பட்ட மலை, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகவும், வேற்றுக் கிரகவாசிகள் (Aliens) வந்துசெல்லும் இடம் என்ற உள்ளூர் நம்பிக்கையுடனும் அறியப்படுகிறது.
வரலாற்றுப் பெறுமதிமிக்க தானிகல மலை, தொல்லியல் ரீதியாகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறது இங்கு பேராசிரியர் பரணவிதானவால் பத்து பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றுள் சில பௌத்த பிக்குகளுக்கு குகைகள் வழங்கப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளன.
மலையேற்றத்தின் போது, மிகப் பெரிய சயனப் புத்தரின் சிதைந்த பகுதிகளைக் காணலாம்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பழமையான பாறை ஓவியங்களும் இங்கு பார்வையாளர்களால் அவதானிக்க முடியும்.
பல பாறைக் குகைகளும் மலையில் காணப்படுகின்றன.
இங்கு புராதன நகைகள், களிமண் பாத்திரங்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கந்தேகம ராஜமஹா விகாரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சின்னங்கள் பலவும் புதையல் தோண்டுபவர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.
புத்தர் சிலைகள் அழிக்கப்பட்டிருப்பதுடன், பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருந்த கல்வெட்டுகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பெருமைமிக்க வரலாற்றை அழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளால் பொதுமக்கள் மத்தியில் கவலையும் கோபமும் எழுந்துள்ளது.
இதேவேளை, தொல்லியல் முக்கியத்துவத்தைத் தாண்டி, தானிகல மலை ‘ஏலியன் மலை’ என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தானிகலவை அண்மித்த வயல்வெளியில் விண்கல் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வேற்றுகிரகவாசிகளை எவராலும் பார்க்க முடியவில்லை என்றாலும், மலை உச்சியைச் சுற்றி பல்வேறு பிரகாசமான ஒளிகள் தோன்றுவதாகவும் இதனால் வேற்றுகிரகவாசிகள் மலைக்கு வருவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அத்துடன், மலை ஏறும் போது காணப்படும் சிவப்பு சேறு, பல்வேறு பாறைகள் வகைகளும் வேற்றுகிரகவாசிகளின் மர்மங்கள் இருப்பதாக முடிவு செய்வதற்கான காரணங்களாக உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகின்றனர்.
சிங்கள வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ள பல்கலைக்கழக ஆய்வுக்குழுவொன்றின் கட்டுரையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
