இந்தியா
“படித்தால் தீட்டு என்றபோது.. படிக்காமல் இருந்தால் தீட்டு என கிறிஸ்துவ அமைப்புகள் பள்ளிகளை திறந்தன” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

“படித்தால் தீட்டு என்றபோது.. படிக்காமல் இருந்தால் தீட்டு என கிறிஸ்துவ அமைப்புகள் பள்ளிகளை திறந்தன” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நம் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் திட்டமாக உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டம். தமிழக முதலமைச்சர் விஸ்வகர்மா திட்டம் தமிழகத்தில் நிச்சயம் செயல்படுத்தப்படாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள MCC பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதிமாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் என்னை அழைத்ததற்கு நன்றி.
இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நேரம் கேட்டபோது டிசம்பர் மாதம் வைத்துள்ளீர்கள் சென்னையிலிருந்து வருகிறேன் என்று தெரிவித்து இருந்தேன். இயற்கை இன்று உங்களுக்கு உதவி உள்ளது.
பொதுவாக குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தான் பெற்றவர்கள் செல்வார்கள். என் தந்தை படித்த பள்ளிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளீர்கள்; நான் தவறாக சொல்லவில்லை. என் தந்தை படித்த பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக முதலமைச்சரை உருவாக்கிய சிறப்பான பள்ளி இது. என் தந்தை மட்டுமல்ல என் பெரியப்பாக்கள், திமுக கழக உறவுகள், காங்கிரஸ் உறவுகளும் இங்கு உள்ளார்கள் தலைமை செயலகத்தில் உள்ளது போல் உள்ளது. நம்ம பள்ளி நம்ம பவுண்டேஷன் என்ற திட்டத்தை இங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் தமிழக முதலமைச்சர் தொடங்கினார்.
சென்னை எம்.சி.சி பள்ளியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு#UdhayanidhiStalin #DMK #Chennai #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/8ZslF6sn6m
பள்ளியில் படித்தாலே தீட்டு என்று இருந்த நிலையில் படிக்காமல் விட்டால்தான் தீட்டு என்று கல்வியை கொடுக்க கிறிஸ்துவ அமைப்புகள் பள்ளிகளை திறந்து உதவின. கல்வி ஒன்றே அழியாத செல்வம் யாராலும் திருட முடியாத சொத்து என்று தமிழக முதலமைச்சர் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
நம் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் திட்டமாக உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டம். தமிழக முதலமைச்சர் விஸ்வகர்மா திட்டம் தமிழகத்தில் நிச்சயம் செயல்படுத்தப்படாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
நீங்கள் கற்ற கல்வி அடுத்த தலைமுறைனருக்கு பயன்படும் வகையில் செயல்படுங்கள். ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுங்கள் என்று உரிமையோடும், அன்போடும் கேட்டுக்கொள்கிறேன்.
ஶ்ரீதர் வாண்டையார் தான் உண்டு மகிழ்ந்த மில்லர் ஹாலில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்திருக்கிறார். அவர் படித்த வகுப்பறையிலும் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் அந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்க வேண்டும்.
குலத் தொழிலை செய்ய வேண்டும் என கூறிக் கொண்டு ஒரு குரூப் டெல்லியில் சுற்றி கொண்டுள்ளது. தமிழகத்தில் ஒரு மாணவருக்கு கூட கல்வி சேரவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என முதல்வர் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
விஸ்வகர்மா என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். தாத்தா அப்பா என்ன வேலை செய்தார்களோ அதே வேலையை செய்வதுதான் விஸ்வகர்மா திட்டம். குலத்தொழிலை செய்ய வேண்டும் என கூறிக்கொண்டு டெல்லியில் ஒரு குரூப் சுற்றிவருகிறது” என பேசினார்.