இலங்கை
75,000 பேரை அரச பதவியில் இணைக்க முடிவு!
75,000 பேரை அரச பதவியில் இணைக்க முடிவு!
எதிர்வரும் காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புக்கள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரச தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்மூலம் இளைஞர், யுவதிகளுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றியபோது இதனை தெரிவித்துள்ளார். பல வருடங்களாக அரச பதவி வெற்றிடங்களுக்கு முறையான விதத்தில் ஆட்சேர்பபுச் செய்யப்படாமையினால் அரச சேவை பொறிமுறை முழுவதுமாக பின்னடைந்துள்ளது.
இதனால், பிரதமரின் தலைமையில் தாபிக்கப்பட்டுள்ள அரச பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பதவி முகாமைக்கான குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறையான ஆய்வின் பின்னர் சுமார் 75 ஆயிரம் பேரை உரிய முறையின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய அரச சேவையை முன்னெடுத்து செல்வதற்காக இருக்க வேண்டிய தொழில்நுட்ப, சட்ட அமுலாக்கல், வருவாய் அதிகாரிகள் போன்ற பதவிகள் இதில் அடங்கும்.
அதே போன்று இனிவரும் காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புக்கள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரச தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்வதன் மூலம் இளைஞர் யுவதிகளுககு சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
