பொழுதுபோக்கு
பிக்பாஸ் ஒரு சமூகச் சீரழிவு நிகழ்ச்சி: எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிடத் திரண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்
பிக்பாஸ் ஒரு சமூகச் சீரழிவு நிகழ்ச்சி: எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிடத் திரண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்
சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு போராட்டம் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியினர் அந்தப் பகுதியில் குவிந்துள்ளனர்.போராட்டத்தின்போது எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோர் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், பேரிகார்டுகளை அடுக்கி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பம் முதலே சர்ச்சைகளுக்குள் சிக்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மொழி நிகழ்ச்சிகளிலும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தொடர்ந்து பல அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இந்தக் கருத்தை வலுவாக முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் முன்னர் வெளியிட்ட அறிக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரான செயல் என்று கடுமையாகச் சாடியிருந்தார். தமிழர் பண்பாடான ‘நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி’ போன்ற விழுமியங்களை, ‘பொழுதுபோக்கு’ என்ற பெயரில் அழிக்க முயலும் வணிகப் பாம்புதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இது தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து, சீரழிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது என்றும், இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றன. தமிழர் குடும்பம் என்பது அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல் என்ற விழுமியங்களுடன் வாழும் உன்னதமான அமைப்பு என்றும், ஆனால் இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு வெறுப்பையும், வன்முறையையும், தனிமனித மோதல்களையும் மட்டுமே கற்றுக்கொடுக்கிறது என்றும், இது குடும்ப நல்லிணக்கத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் எதிரான தீவிரமான பண்பாட்டு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இந்த திடீர் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, செம்பரம்பாக்கம் பகுதியில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.
