Connect with us

இந்தியா

Aadhav Arjuna | வியூக வகுப்பாளர் முதல் விசிக துணை பொதுச்செயலாளர் வரை…! யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

Published

on

Aadhav Arjuna | வியூக வகுப்பாளர் முதல் விசிக துணை பொதுச்செயலாளர் வரை...! யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

Loading

Aadhav Arjuna | வியூக வகுப்பாளர் முதல் விசிக துணை பொதுச்செயலாளர் வரை…! யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியான விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சி எனப் பேசியது திமுகவினரை கொதிப்படையச் செய்துள்ளது. அதிரடியாகப் பேசிய ஆதவ் அர்ஜுனா யார்… அவரின் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

கடந்த 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு நாளில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை மறைமுகமாக எதிர்த்துப் பேசிய வார்த்தைகள், அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. திமுகவுக்கு எதிராக இப்படி ஆவேசமாகப் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னராட்சி நடப்பதாகவும், பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது என்றும் தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சு பெரும் பேசுபொருளான நிலையில், அவரை விசிகவிலிருந்து நீக்குவதற்கான சூழல் நிலவுகிறது.

தற்போது தமிழகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ஆதவ் அர்ஜுனா, இதற்கு முன்பு பல ஆண்டுகள் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் குழுவில் பணியாற்றியவர். அங்கிருந்து வெளியேறி “Voice of Commons” என்ற நிறுவனத்தைத் தொடங்கிய ஆதவ் அர்ஜுனா விசிகவின் வியூக வகுப்பாளரானார்.

Advertisement

விசிகவின் கூட்டங்கள், விழாக்களை ஒருங்கிணைக்கும் பணிகளை இவரின் நிறுவனம் செய்து வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திருச்சியில் நடந்த “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில், திருமாவளன் முன்னிலையில், விசிக உறுப்பினராக ஆதவ் அர்ஜுனா இணைந்தார்.

அடுத்த 21-ஆவது நாளில், அதாவது கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி நடந்த விசிக உயர்நிலைக் கூட்டத்தின் முடிவில், ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புதிதாகக் கட்சியில் இணைந்தவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பா என அப்போதே கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சுகள் எதிரொலித்தன.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக ஒரு பொதுத்தொகுதி கேட்ட நிலையில், அது ஆதவ் அர்ஜுனாவுக்காகத்தான் எனப் பேசப்பட்டது. ஆனால், பொதுத்தொகுதி கிடைக்காததால் ஆதவ் அர்ஜுனா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

Advertisement

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுகவை நேரடியாகத் தாக்கிப் பேசத் தொடங்கினார் ஆதவ் அர்ஜுனா. விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற முடியாது என அவர் பேசியதில் இருந்து ஆதவ் அர்ஜுனாவுக்கும், திமுகவுக்குமான உரசல் தொடங்கியது.

4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதலமைச்சராகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சராகக் கூடாது என ஆதவ் அர்ஜுனா பேசியதும் திமுகவினரை கொந்தளிக்கச் செய்தது.

இதற்காக, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினையாற்றினர். அந்த விவகாரம் அடங்கினாலும், அவ்வப்போது எக்ஸ் பதிவுகளில் திமுகவை சீண்டிவந்த ஆதவ் அர்ஜுனா, தவெக மாநாட்டில் விஜய் பேசிய, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை வரவேற்றார்.

Advertisement

இந்நிலையில், அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், விஜயையும், திருமாவளவனையும் ஒரே மேடையில் அமர வைக்க முயற்சித்தார். ஆனால், அதில் திருமாவளவன் பங்கேற்காத நிலையில், மன்னராட்சி, பிறப்பின் அடிப்படையில் முதலமைச்சர் என்ற கடுமையாக வார்த்தைகளால் திமுகவை ஆதவ் அர்ஜுனா மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு திமுகவினரை மட்டுமல்லாது விசிக மூத்த நிர்வாகிகளையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன