இந்தியா
“அதிமுக துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“அதிமுக துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்கு பிறகு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் திமுக, அதிமுகவும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இன்று அரசினர் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவந்த பிறகு இன்னும் பல ஆதாரங்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரித்துப் பேசிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி, “NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலைத் தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை. இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக M.P-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும்…
இதேசமயத்தில் சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “அரியவகை கனிமமும் அரியவகை மனிதர்களும். வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியவர் மோடி. நிறுத்துவதாக நடிப்பவர் அண்ணாமலை. நடந்ததை அவர் மறந்துவிட்டதால் நாடே மறந்திருக்கும் என நம்புகிறவர் எடப்பாடி.
கனிமவள திருத்தச்சட்டத்தை மக்களவையில் எதிர்த்து ஒலித்த எங்கள் ஐம்பது பேரின் குரலை இன்று நாடே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் விசுவாசத்திற்கு துணை போகும் எல்லாருக்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியதே மோடி அரசு தான். கனிமவளங்கள் திருத்தச்சட்டம் 2023 (THE MINES AND MINERALS (DEVELOPMENT AND REGULATION) AMENDMENT BILL, 2023) மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு 28 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்களில் மக்களவை போர்க்களம் போல இருந்தது. இந்தச் சட்டம் தேசத்தின் கனிமவளங்களைப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்காக தாரைவார்க்கக் கொண்டுவரப்படுகின்ற சட்டம். மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிற சட்டம் இதனை ஏற்க முடியாது என அவையின் மையப்பகுதிக்கு மட்டுமல்ல அவைத்தலைவரின் இருக்கைக்கே சென்று முழக்கமிட்டு எங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
எங்களின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தனக்கு இருந்த மிருகப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாங்கள் சொல்லுகிற எதையும் கேட்காமல் சட்டத்தை நிறைவேற்றியது மோடி அரசு. இந்தச் சட்டத்தின்படி வேதாந்தாவின் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தை டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அரிட்டாபட்டிக்கு அனுப்பிவைக்கும் திருப்பணியைச் செய்தது மோடி அரசு.
அரியவகை கனிமமும்
அரியவகை மனிதர்களும்.
வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியவர் மோடி.
நிறுத்துவதாக நடிப்பவர் அண்ணாமலை.
நடந்ததை அவர் மறந்துவிட்டதால் நாடே மறந்திருக்கும் என நம்புகிறவர் எடப்பாடி.
கனிமவள திருத்தச்சட்டத்தை மக்களவையில் எதிர்த்து ஒலித்த எங்கள் ஐம்பது பேரின் குரலை இன்று… pic.twitter.com/9gNU6us8B9
ஆனால் அரிட்டாபட்டியிலும், மேலூரிலும் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு வந்தவுடன் இன்று வேகவேகமாக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய கனிமவளங்கள் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்குக் கடிதம் எழுதி அவர் முடிவைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார் எனவும் விவசாயிகளின் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாட்டையும் பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
அண்ணாமலை, இந்தச் சட்டம் மக்களவையில் நிறைவேறிய பொழுது அன்றைய தினம் மிகச்சிறிய எண்ணிக்கையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய எங்களின் முழக்கத்தை காணொளியில் கேளுங்கள். “அதானிக்கான சட்டத்தைத் திரும்பப்பெறு” என்று அவை அதிர முழங்கினோம்.
அதானியின் நலனுக்கு எதிராக எதையும் செய்யாத பிரதமரால் இந்தச் சட்டம் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது. அன்று மக்களவையில் ஐம்பது பேரின் முழக்கம் இன்று அரிட்டாபட்டியில் பல்லாயிரம் பேரின் முழக்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
அன்று மூர்க்கத்தனமாகச் சட்டம் கொண்டு வந்த நீங்கள் இன்று மக்கள் எதிர்ப்பைக் கண்டு வேகவேகமாகப் பின்வாங்கக் கடிதம் எழுதுகிறீர்கள். அன்று உங்களை ஆதரிப்பதை மட்டுமே அரசியலாகக் கொண்டிருந்த எடப்பாடி, “இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என இந்தியா கூட்டணியைப் பார்த்து இன்று சட்டமன்றத்தில் ஆவேசமாகக் கேட்கிறார்.
எடப்பாடி, இன்று நீங்கள் பேசியதை விட ஆயிரம் மடங்கு ஆவேசத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் மோடி ஆட்சியின் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் கூண்டுப் பறவையாக குறுகிக் கிடந்தீர்கள். சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்யும் உங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை.
உங்களின் புதிய அவதாரம் கடந்தகால பாவங்களை இல்லாமல் செய்துவிடாது. காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்டுகளுக்கானதே எனும் பிரதமர் மோடியின் விசுவாசத்திற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என பதிவிட்டிருந்தார்.
இதனை ரீ – ட்வீட் செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!
மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.
மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி!
பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!
மதுரை #Tungsten விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன்… https://t.co/muLgijIcie
அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.
டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.
அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?
மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமியின் புளுகும் – புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.