இந்தியா
“மாற்றானின் கால் பிடித்து தன்மானம் கெட்டு..” – ஆதவ் அர்ஜுனாவை சாடிய வன்னி அரசு.. பேசுபொருளான கவிதை!

“மாற்றானின் கால் பிடித்து தன்மானம் கெட்டு..” – ஆதவ் அர்ஜுனாவை சாடிய வன்னி அரசு.. பேசுபொருளான கவிதை!
சென்னையில் நடந்த “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மன்னராட்சி என தவெக தலைவர் விஜய் முன்னிலையில், விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது திமுக-வினரை கொந்தளிக்க வைத்தது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
இந்த சூழலில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள், கட்சியின் நலனுக்கு எதிராக இருப்பதாக கருதியதால் அவரை இடைநீக்கம் செய்ய நிர்வாகக் குழு முடிவு செய்ததாக தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தனது அறிவுறுத்தலை மீறி, சர்ச்சைக்குரிய வகையில், ஆதவ் அர்ஜுனா பேசியதாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் திமுக தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
சஸ்பெண்ட் குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் எடுத்த நடவடிக்கையை, காலத்தின் கரங்களில் ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.
தாம் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும், அந்த தொண்டர்களின் குரலாக எப்போதும் இருப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். விசிக துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்றபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, இடைநீக்கம் செய்யப்பட்டபோதும் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான், மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்று சுட்டிக்காட்டியுள்ள ஆதவ் அர்ஜுனா, கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.
கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம் எனவும், கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையை காலத்தின் கரங்களில் ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளார்.
இறுதியாக, ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை எனவும் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, கூடவே, திருமாவளவனின் கவிதை வரிகளையும் பகிர்ந்திருந்தார்.
இந்த கவிதையை திருத்தம் செய்து பதிவிட்டுள்ள விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, அதில் ஆதவ் அர்ஜுனா சாடும் வகையில் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.
“அடித்தாலும் உதைத்தாலும் அவமானம் செய்தாலும் ஆத்திரங்கொண்டு எழாமல் மனிதன் என்பதே மறந்து மாற்றானின் கால் பிடித்து தன்மானம் கெட்டு வாழ்கிறாயே!” என்றும், “நெஞ்சில் துணிச்சலின்றி அஞ்சி ஒடுங்கி கஞ்சி குடிப்பதற்கே கெஞ்சி கிடக்கிறாயே!” என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார் வன்னி அரசு.
விடியாதோ
வாழ்க்கையென
விம்பி துடித்தபடி
விவரம் அறியாமல்- தன்
விழி கலங்கி நிற்பவனே!
புலராதோ
வாழ்க்கையென
பொற்கனவு கண்டபடி
பொழுதெல்லாம்
பாடுபட்டு- தினம்
புலம்பி தவிப்பவனே!
அடித்தாலும்
உதைத்தாலும்
அவமானம்
செய்தாலும்
ஆத்திரங்கொண்டு எழாமல்
மனிதன் என்பதே மறந்து
மாற்றானின்
கால்… https://t.co/G3tB6t3eIX
ஆதவ் அர்ஜுனாவை சாடும் வகையில் வன்னி அரசு வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக அமைந்துள்ளது. முன்னதாக, “ஆதவ் அர்ஜுனா மீதான ஒழுங்கு நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது. அவரை சஸ்பெண்ட் செய்ததில் எந்தவிதமான புற அழுத்தமும் இல்லை. ஆதவ் அர்ஜுனா இந்த விவகாரத்தில் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை” என்றும் வன்னி அரசு வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.