பொழுதுபோக்கு
சினிமாவில் கால் பதிக்கும் அன்புமணி ராமதாஸ் மகள்: ரஜினிகாந்துடன் சந்திப்பு ஏன்?

சினிமாவில் கால் பதிக்கும் அன்புமணி ராமதாஸ் மகள்: ரஜினிகாந்துடன் சந்திப்பு ஏன்?
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல்கட்சிகளில் ஒன்றாக இருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா முதல்முறையஙாக தயாரித்துள்ள அலங்கு படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.தமிழக அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கியவர் டாக்டர் ராமதாஸ். தற்போது அவரது மகன் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க தேர்தலை சந்தித்து. இதில் தர்மபுரி தொகுதியில், அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.இந்த தேர்தலில் தனது அம்மாவுக்காக பல இடங்களில் அன்புமணி ராமதாஸின் மகள்கள் வாக்கு சேகரித்தனர். அரசியலில் இருந்து சினிமா தயாரிப்பாளராக மாறியுள்ளார் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சௌமியா அன்புமணி. இவர் தயாரித்துள்ள முதல் படம் அலங்கு. வரும் டிசம்பர் 27-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.குணாநிதி, செம்பொன் வினோத், காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனிடையே இந்த படத்தின் டிரெய்லரை தற்போது நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதற்காக படக்குழு நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்த சந்திப்பின்போது படத்தின் டிரெய்லரை பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (டிசம்பர் 12) தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள ரஜினிகாந்துக்கு அலங்கு படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“