இந்தியா
தவெக மாநாட்டிற்கு சென்று மாயமான இளைஞர்.. நீதிமன்றம் சென்ற தந்தை – காவல்துறை விளக்கம்

தவெக மாநாட்டிற்கு சென்று மாயமான இளைஞர்.. நீதிமன்றம் சென்ற தந்தை – காவல்துறை விளக்கம்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற இளைஞர் மாயமானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த புஷ்பநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற தனது மகன் மேகநாதன் வீடு திரும்பவில்லை என மனுவில் கூறியுள்ளார்.
காணமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
Also Read :
வன்னியர் உள் இட ஒதுக்கீடு; முதல்வர் சொன்ன காரணம்.. சட்டமன்றத்தில் பாமக அமளி
அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், விசாரணையின் நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து வாதிட்ட அவர், மேகநாதனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், தாம்பரம், புதுச்சேரி சென்னை உள்ளிட்ட இடங்களில் மேகநாதனை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இருப்பினும், அவரை தேடும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.