இந்தியா
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் காப்பியா கலைஞர் கைவினைத் திட்டம்? – இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் காப்பியா கலைஞர் கைவினைத் திட்டம்? – இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் கடந்த ஆண்டு பிரதமரின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரதமரால் துவங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், காலணி தைப்பவர் – காலணி தொழிலாளர் – காலணி செய்பவர், கயிறு செய்யபவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர்,முடி திருத்தம் தொழிலாளர், பூமாலை கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன் பிடி வலை தயாரிப்பவர், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், இரும்புக் கொல்லர், பூட்டுகள் செய்பவர்கள் என 18 விதமான தொழில்களைச் செய்வோர் பயன் பெறலாம். இதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பயன்பெறுபவர்களுக்கு விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, 18 வயது நிரம்பியவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றும், திட்டத்தில் சேருபவர்கள் 18 வயதுக்கு முன்பே அந்தத் தொழிலை கற்றிருக்க வேண்டும், அது குரு – சிஷயன் வழியில் கற்றிருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
இதில், மத்திய அரசே பயிற்சி வழங்கும் திட்டமும் இருக்கிறது என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் ரூ. 500 நிதியுதவியும், தொழிற்கருவிகளை வாங்க ரூ. 15,000 நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தில் சேர்பவர்கள் தங்கள் தொழிலை துவங்குவதற்கு முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடனும், இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடனுன் கடன் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. இந்தத் திட்டம் குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து, இது குறித்து ஆய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஒரு குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்தக் குழுவின் ஆய்வு பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி, திருத்தங்கள் மேற்கொண்டால் தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் மீண்டும் மத்திய அரசு விஸ்வகர்மா திட்டம் குறித்து அறிக்கையை வழங்கியது. அதில் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த எந்தத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
இதனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ‘‘பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செல்லாது’’ என்றும், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக சாதி, குடும்பத் தொழில் வேறுபாடின்றி புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.
முதல்வர் அறிவித்தப்படி தமிழ்நாட்டிற்கு என ‘கலைஞர் கைவினைத் திட்டம்’ கடந்த 7-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், “இந்தத் திட்டம், குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், தையல் வேலை, நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலைவேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும். ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 18 வயது நிரம்பியவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
* திட்டத்தில் சேருபவர்கள் 18 வயதுக்கு முன்பே அந்தத் தொழிலை கற்றிருக்க வேண்டும்.
* குரு – சிஷயன் வழியில் கற்றிருக்க வேண்டும்.
* குடும்பத் தொழில் அடிப்படையில் இல்லை.
* குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாததற்கு தமிழ்நாடு மக்கள் ஆற்றிய எதிர்வினையை தாங்க முடியாமல், திமுக அரசு விஸ்வகர்மா திட்டத்தினை கட்-காப்பி-பேஸ்ட் செய்து அதன் ஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டுள்ளது என்றும், திமுக அரசால் தொடங்கப்பட்ட புதிய திட்டம் சில தகுதி தளர்வுகளுடன் இருக்கிறது, இது உள்ளூர் திமுக செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பலரும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தையே தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது என்று பரவலாக குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது. இதனை ஆராய்ந்த தமிழ்நாடு சரிபார்ப்பகம் “விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில் “குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே வேளையில் விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என்று உள்ளது. மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள்.
இது, தங்கள் குடும்பத் தொழிலில் 18 வயதிற்கு முன்பே ஈடுபடத் தூண்டும் வகையில் உள்ளது, இது மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைத்து குலத் தொழிலில் தள்ளும் என்பதால் இதில் தமிழ்நாடு அரசு இணையவில்லை.
குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி கனவைச் சிதைக்காமல் அதே நேரத்தில் இவ்வகை தொழில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என, ‘கலைஞர் கைவினைத் திட்டம்’ முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப / வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வகுப்பு அடிப்படையில் எனச் சுருங்காமல், தொழில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு அரசு சார்பாக வந்த விளம்பரத்தில் விண்ணப்பிக்கத் தகுதி என்பதில் 35 வயது நிரம்பியவர்களுக்கு என்றும், எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.