இந்தியா
சட்டமன்றத்தில் ஆட்சேபனைக்குள்ளான கனிம நில வரிச் சட்ட மசோதா.. குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றம்
சட்டமன்றத்தில் ஆட்சேபனைக்குள்ளான கனிம நில வரிச் சட்ட மசோதா.. குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றம்
தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சுரங்கங்கள், கற்சுரங்கங்கள் ஆகியவற்றை கொண்டுள்ள நிலங்களின் மீது வரி வசூலிப்பதற்காக சட்டம் இயற்றுவதற்கு மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்ற சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தில், பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்கள் என்றும்; கரட்டுக்கல், சரளை மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கல், மணல், படிகக் கல், உருட்டு களிமண், களிமண், ஆற்று மணல், நொறுக்கிய கல், சுண்ணாம்பாறை உள்ளிட்ட 17 வகை கனிமங்களை சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெரிய கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. சிறு கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது.
நிலத்தில் உள்ள கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு முறையே ஒரு டன்னுக்கு ரூ.8,500 மற்றும் ஒரு கன மீட்டருக்கு ரூ.3.50 என வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), ஜி.கே.மணி (பா.ம.க.), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
பெரிய கனிமங்களுக்கு வரி விதிப்பது சரிதான். ஆனால் சிறிய வகை கனிம நிலங்களுக்கான வரி உயர்வினால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துவிடும். இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டத்தைக் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
அவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார். அப்போது, “ராயல்டி என்பது வரியல்ல” என்றும் “வரியைப் பெறுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. விற்பனை வரியில் சில மாறுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு மாறுபாடு இல்லை. வரி விதிக்கும்போது அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அந்த மசோதா, எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
