இந்தியா
தமிழ்நாடு ஜிடிபி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.. – சிஏஜி அறிக்கையில் தகவல்

தமிழ்நாடு ஜிடிபி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.. – சிஏஜி அறிக்கையில் தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், மாநில நிதி தணிக்கை அறிக்கை குறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது 2021-2022-ல் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 46 ஆயிரத்து 538 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022-2023-ம் ஆண்டில் 36 ஆயிரத்து 215 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் வருவாய் அதிகரித்திருப்பதே காரணம் எனவும் அவர் கூறினார்.
மேலும், தொழில் மற்றும் சேவைத் துறைகள் வளர்ச்சியடைந்துள்ளதால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மாநில ஜிடிபி 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் தேசிய சராசரியை விட 56 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
நிதி பயன்பாட்டை பொறுத்தமட்டில் வருவாய் செலவினம் முந்தைய ஆண்டை விட 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் 21 ஆயிரத்து 980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறினார். மேலும் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையில் போக்குவரத்து கழகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஊழியர்களின் செலவினம் 55 சதவீதம் முதல் 63 சதவீம் வரை உள்ளது என்றும், 2017 முதல் 2022 வரை 22 ஆயிரத்து 517 பேருந்துகள் இருந்த நிலையில் தற்போது 20 ஆயிரத்து 304 பேருந்துகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் செலவினங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் கூறினார்.
#JUSTIN “தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது”
-2022-23 நிதியாண்டுக்கான தமிழ்நாடு மாநிலத்தின் CAG அறிக்கை குறித்து முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் பேட்டி#TamilNadu #CAGReport #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/DaMNQn6BFy
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ பணியாளர்களை பணியமர்த்துவதற்காக தனி வாரியம் இருந்தும் கூட பணியாளர்களை புதிதாக சேர்ப்பதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.