இந்தியா
பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
நாமக்கல் மாவட்டம், நஞ்சை எடையார் மேல்முகம் கிராமத்தில், மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1.73 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக, கபிலர் மலை தொகுதியில் 2006- 2011 ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக இருந்த பா.ம.க.வைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மீதும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக பரமத்தி வேலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னிமணி மற்றும் காமராஜ் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் மற்றும் பொன்னிமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், வழக்கு தொடர்பாக 2013ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தயாராக இருந்த போதும், ஆறு ஆண்டுகளுக்கு பின், 2019ம் ஆண்டு தான் நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அபகரித்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.