இந்தியா
Vaikom | “சாதிய பாகுபாடுகளை களைய சட்டத்தைவிட மக்களின் மனமாற்றமே அவசியம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Vaikom | “சாதிய பாகுபாடுகளை களைய சட்டத்தைவிட மக்களின் மனமாற்றமே அவசியம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வரலாற்று சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, கேரளா மாநிலம் கோட்டயத்தில் விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பரஸ்பரம் பெரியார் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.
பெரியாரின் புகைப்படத்திற்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய போது, பின் வரிசையில் இருந்த விசிக தலைவர் திருமாவளவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிழுத்து, பினராயி விஜயனிடம், அவரை பற்றி புகழ்ந்து பேசினார்.
ரூ.8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், பெரியார் நினைவகத்தை, பினராயி விஜயன் திறந்து வைக்குமாறு மு.க.ஸ்டாலின் அன்போடு அழைத்த நிலையில், இருவரும் சேர்ந்தே ரிப்பனை வெட்டினர்.
இதே போன்று, நூலகத்தையும் மு.க.ஸ்டாலின் திறப்பதாக கூறப்பட்ட நிலையில், அமைச்சர் துரைமுருகனிடம் முதலமைச்சர் கத்திரக்கோலை கொடுத்து திறக்குமாறு கூறினார்.
புனரமைக்கப்பட்ட நினைவகம் மற்றும் நூலகத்தை பினராயி விஜயனுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அப்பகுதி மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். வைக்கம் நூற்றாண்டு விழா மேடையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பரம் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து, நடப்பாண்டிற்கான வைக்கம் விருதை கர்நாடகாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் தேவனூர மஹாதேவாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் பேசிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், சமூக நீதி ஆட்சியில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற பாகுபாடே இல்லை எனக்கூறினார். வைக்கம் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலையாளத்தில் சிறிது நேரம் உரையாற்றி அம்மாநில மக்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், 100 ஆண்டுகளுக்குப் பிறகு சமூகநீதியாக நாம் முன்னேறி இருந்தாலும் பல முன்னேற்றங்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். சட்டங்கள் மூலம் அனைத்தையும் சரி செய்ய முடியாது எனக்கூறிய முதலமைச்சர், மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுவது மிக அவசியம் என குறிப்பிட்டார்.
வைக்கம் நூற்றாண்டு விழா மேடையில், போராட்டத்தின் பின்னணி, பெரியாரின் பங்களிப்பு காணொலியாக ஒளிபரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருமாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.