இந்தியா
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் : எதிர்பார்ப்புகள் என்னென்ன?

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் : எதிர்பார்ப்புகள் என்னென்ன?
சென்னையில் இன்று (டிசம்பர் 15) நடைபெறும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அதிமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஆண்டுதோறும் கட்சிகளின் சார்பில் இருமுறை செயற்குழு கூட்டமும் ஒரு முறை பொது குழு கூட்டமும் நடைபெற வேண்டும்.
அதன்படி தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
2019 மக்களவை தேர்தலை அடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது அதிமுக. இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், ஏழு இடங்களில் டெபாசிட் இழந்து பரிதாப தோல்வியை சந்தித்தது.
இந்தநிலையில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் மூத்த நிர்வாகிகள் 10 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை நியமித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
அந்தக் குழுவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு கட்சி தலைமையிடம் கள ஆய்வு விவரங்களை அறிக்கையாக கொடுத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கள ஆய்வு விவரங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இக்கூட்டத்தில் உட்கட்சித் தேர்தலை நடத்துவது, மதுரை டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், கூட்டணி வியூகங்கள் அமைக்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அளிப்பது, பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்படும் என கருதப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தபடி, மொத்தத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் அதிமுகவினரை சட்டமன்ற தேர்தலுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.