விளையாட்டு
கோப்பையுடன் சென்னை வந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் : உற்சாக வரவேற்பு!
கோப்பையுடன் சென்னை வந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் : உற்சாக வரவேற்பு!
சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு தமிழக அரசு சார்பில் இன்று (டிசம்பர் 16) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் கலந்து கொண்ட இந்தியா சார்பில் தமிழக வீரர் குகேஷ் கலந்துகொண்டார்.
அவருக்கும் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் நடந்த இறுதிப்போட்டியில் கடுமையாக போராடி குகேஷ் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 18 வயதில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் வரை உலகின் பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய அவர், இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
பின்னர் கையில் வெற்றி கோப்பையுடன் விமான நிலைய முகப்பை அடைந்த அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “உலக சாம்பியன் கோப்பையை இந்தியா கொண்டுவந்ததில் மகிழ்ச்சி. இது எனது நீண்ட நாள் கனவு. எனக்கு மக்கள் தரும் ஆதரவு புத்துணர்ச்சி அளிக்கிறது.
என்னை எதிர்த்து விளையாடிய சீன வீரர் லிரனும் சிறப்பாக விளையாடினர். எதிராளியை அழுத்தத்தில் போட்டால் தவறுகள் நடக்கும். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடியது சாம்பியன் பட்டம் வெல்ல மிகப்பெரிய அனுபவமாக இருந்தது” என்று குகேஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து அவருடைய வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு காரில் ஏறி தனது இல்லத்திற்கு சென்றுள்ளார்.