இந்தியா
மண்வளம் காக்க… உர மானியம் ஏன் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்?

மண்வளம் காக்க… உர மானியம் ஏன் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்?
கருத்து: அசோக் குலாட்டி, ரித்திகா ஜுனேஜா – Ashok Gulati, Ritika Juneja டிசம்பர் 5, 2024 அன்று உலக மண் தினம் அனுசரிக்கப் பட்டது. இரண்டிலிருந்து மூன்று செ/.மீ வரை உள்ள மண்ணின் மேல்பகுதி விவசாயத்திற்கு மிகவும் முக்கியம். இதை உருவாக்குவதற்கு இயற்கை ஒரு ஓராயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 95 சதவீத உணவு உற்பத்தி இதிலிருந்தே செய்யப்படுகிறது. ஆனால், நம் நிலங்கள் வளமான நிலத்திற்குத் தேவையான உயிர்ச்சத்து குறைபாடு உடைய நிலங்களாக மாறி வருகின்றன. ஆகவே, இந்த வருட உலக மண் நாளின் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்ட “மண்ணைப் பாதுகாத்தல் – அளவிடு, மேற்பார்வையிடு, நிர்வகி” என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானதாகும்.ஆங்கிலத்தில் படிக்கவும்: All is not well with soilஅதே நாட்களில், டிசம்பர் 4 முதல் 6-ம் தேதி வரை உர உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு “நிலையான உரமும், விவசாயமும்” என்ற தலைப்பில் அவர்களுடைய வருடாந்திர கருத்தரங்கை நடத்தினர். 20 நாடுகளிலிருந்து சுமார் 1,400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். நம் நிலங்களை வளமாக்கவும், உயிர்ச் சத்துக்கள் குறையாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், நம் நாட்டு உரத் தொழிற்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உற்பத்தித் திறன் மிகுந்த விதைகள் விவசாயத்தை ஊக்குவிக்கும். அதேநேரம் உர நிறுவனங்கள் தரும் தேவையான உயிர்ச்சத்தில்லாமல் அவை உச்சக் கட்ட உற்பத்தியைத் தர முடியாது.இப்போது, இந்திய மண்ணின் வளம் பற்றியும், அதில் உர உற்பத்தியாளர்கள் பங்கைப் பற்றியும் பார்ப்போம். நம் விவசாய நிலங்களில், 5 சதவீதத்திலும் குறைவான நிலப் பகுதிகளே தேவையான நைட்ரஜனைக் கொண்டுள்ளது. 40 சதவீதம் தேவையான பாஸ்பேட்டும், 32 சதவீதம் பொட்டாசியம், 20 சதவீதம் கரிம கார்பனும் பெற்றுள்ளது. நுண்ணுயிர்ச் சத்துக்களான கந்தகம், இரும்பு, துத்தநாகம், போரான் ஆகியவை நம் நிலங்களில் குறைபாடு உடனுடனேயே காணப்படுகின்றன. இந்தக் குறைபாடுகள் சில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் மிக அதிகமாகவும் காணப்படுகின்றன. ஆகையினால், இந்திய உர உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம் என்பதை விட மிகவும் பெரியதாகும்.இந்தியா விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். கொரோனா பாதிப்பினையும் மீறி, 2020-21 லிருந்து 2022-23 வரை மூன்றாண்டுகளில் 850 லட்சம் டன் தானியங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 81 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டதன் பின்பும், இந்த ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியா இதுவரையில் அரிசி ஏற்றுமதியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. இந்த வெற்றியின் ஒரு பகுதி இந்திய உர உற்பத்தியாளர்களைச் சாரும். அது விவசாயப் பணிகள் நடைபெறும் போது நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் பிற நுண்ணுயிர்ச் சத்துக்களை உற்பத்தி செய்தோ அல்லது இறக்குமதி செய்தோ தக்க சமயங்களில் தேவையான அளவு கிடைக்கச் செய்து உற்பத்தித் திறன் பெருக உறுதி செய்துள்ளது.இதைக் குறிப்பிடும் அதே வேளையில், நம் விளைநிலங்களோ, உரம் தயாரிப்புத் தொழிலோ, விவசாயமோ மிக நன்றாக இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. உற்பத்தித் திறன் 30 சதவீதம் மந்தமாகவும், சில இடங்களில் 50 சதவீதம் வரை கூட மந்தமாக உள்ளது. இந்த மந்த நிலை நீக்கப்பட்டால் உற்பத்தி உயரும். நம் உர உற்பத்தித் தொழில் மிக அதிக அளவில் தரப்படும் மானியத்தின் மூலமே வாழ்கிறது. ரூ. 1,88,000 கோடி என்ற அளவில், இது கடந்த நிதியாண்டின் மொத்த மத்திய பட்ஜெட்டின் 4 சதவீதமாகும். மூன்றில் இரண்டு பங்கு மானியம் யூரியாவிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. குருணை வடிவில் தயாரிக்கப்படும் இந்த உரத்தின் விலை அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டன் ரூ.6,000 என்ற அளவில் இது மிகுந்த விலை வித்தியாசத்துடன் உலகிலேயே குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இந்த நிலை கடந்த பத்து ஆண்டுகளாக நீடிக்கிறது.அரசின் உயிர்ச்சத்து அளவுக்குத் தகுந்த மானியம் என்ற கொள்கை 2010-ல் கொண்டு வரப்பட்டு, டி.ஏ.பி (டை அம்மோனியம் பாஸ்பேட்) எம்.ஓ.பி-யின் (முரியட் ஆஃப் பொட்டாஷ்) மானியம் இந்தக் கொள்கை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் யூரியாவை அதில் சேர்க்கவில்லை. அதன் காரணமாக, யூரியா, டி.ஏ.பி மற்றும் எம்.ஓ.பி-வின் விலை இந்த அவசியமான உரங்கள் பயன்படுத்தப் படுவது போலவே மிகவும் ஏற்றத் தாழ்வுகளுடன் உள்ளது. விவசாய உற்பத்தியில் முன்னிலையிலுள்ள மாநிலங்களில், நைட்ரஜனை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பாஸ்பேட் மற்றும் பொட்டாசியத்தை குறைவாகப் பயன்படுத்துகின்றனர். பஞ்சாப் மாநிலம் சிறந்த உதாரணமாகும், இங்கே நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியத்தின் பயன்பாடு ஒரு கேலிக் கூத்தாகிவிட்டது. பஞ்சாப் விவசாயக் கல்லூரியின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டு விகிதத்துடன் ஒப்பிடும் போது, நைட்ரஜனை 61 சதவீதம் தேவைக்கு அதிகமாகவும், பாஸ்பேட்டை 89 சதவீதம் குறைவாகவும், பொட்டாசியத்தை 8 சதவீதம் குறைவாகவும் இங்கே பயன்படுத்து கின்றனர். அதேபோன்று, தெலுங்கானாவிலும் நைட்ரஜனை 54 சதவீதம் தேவைக்கு அதிகமாகவும், பாஸ்பேட்டை 82 சதவீதம் குறைவாகவும், பொட்டாசியத்தை13 சதவீதம் குறைவாகவும் பயன்படுத்துகின்றனர். மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான். இதன் விளைவாக, விவசாயிகள் நைட்ரஜனை அதிக அளவில் இடுவதால் மிகப் பசுமையான பயிர்களை தங்கள் நிலங்களில் பார்த்தாலும், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியத்தை குறைவாகப் பயன்படுத்துவதால் தானியங்களின் விளைச்சல் குறைவாகவே இருக்கிறது.நைட்ரஜன், பாஸ்பேட், மற்றும் பொட்டாசியத்தை பயன்பாட்டில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வும், நுண்ணுயிர்ச் சத்துக்களைப் புறக்கணிப்பதாலும் தானிய உற்பத்தி உச்ச அளவை எட்டுவதில்லை. அதன் காரணமாக விவசாயிகளின் வருமானம் குறைகிறது. இதெற்கெல்லாம் அரசின் உர மானியக் கொள்கையே காரணமாகும். விவசாயிகள் பயிர்களுக்கு இடும் மொத்த உரங்களில் பயிர்களுக்குப் போய்ச் சேருவது (உயிர்ச் சத்துக்கள் பயன்பாட்டுத் திறன்) 35-லிருந்து 40 சதவீதம் வரை மட்டுமே, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பயிர்களுக்கு உரமாக இடப்பட்ட மீதியாவும் நைட்ரஸ் ஆக்சைடாக ஆவியாகி காற்று மண்டலத்தில் கலக்கிறது. அது கார்பன் டை ஆக்சைடை விட 273 மடங்கு அதிகமாகும். விசித்திரமாக, இவ்வளவு பெரிய அளவில் கொடுக்கப்படும் மானியம் தானிய உற்பத்தியை பெருக்குவதில் முழுமையாக உதவாமல் காற்று மண்டலத்தில் விஷமாகக் கலக்கக் காரணமாகிறது. இதற்கு மேலாக, குறைந்த பட்சம் 20-25 சதவீத யூரியா விவசாயமில்லாத பிற பயன்பாட்டிற்கு உபயோகப் படுத்தப் படுகிறது, தவிர பக்கத்து நாடுகளுக்கு கடத்தப்பட்டும் வருகிறது. இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.விலைக் கட்டுப் பாட்டிலிருந்து உர உற்பத்தித் தொழிலுக்கு விலக்கு அளிப்பதன் மூலமே இதற்கு தீர்வு காண முடியும். உரம் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு மானியத்தை நேரடியாக (டிஜிட்டல் சீட்டுகளாக) வழங்குவதன் மூலமாகவும் இதற்குத் தீர்வு காணலாம். சிமெண்ட், டீசல் போன்று இந்தத் தொழில் துறைக்கும் விலைக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் இந்தத் துறை சிறந்து விளங்க உதவும். அதே வேளையில் விவசாயிகள் நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற செய்தியும் அவர்களைச் சென்றடையும். மேலும், நுண்ணுயிர்ச் சத்துக்களைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதனால் தானிய உற்பத்தி அதிகரிக்கும், அவர்களுக்கு லாபமும் கிடைக்கும்.இந்த சீர்திருத்தத்தைச் செயல்படுத்த நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உர விற்பனை, மண் ஆரோக்கிய அளவுகள், பி.எம் கிசான் (PM-KISAN) பயன்பாட்டுத் திட்டம், நில அளவீடு, விளைவிக்கப்படும் பயிர் வகைகள், விவசாயிகளின் வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். மத்திய அரசு இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவும் விவசாயிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். அவர்கள் பயனடைவது மட்டுமின்றி, நாடும், நாட்டின் நில வளமும், விவசாயமும் பயன் பெறும். மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மருந்துகள் உற்பத்தித் துறையைப் போன்றே உர உற்பத்தித் துறையும் கொடி கட்டிப் பறக்கும்.மொழிபெயர்ப்பு: எம்.கோபால். இந்த கட்டுரையை எழுதிய அசோக் குலாட்டி பேராசிரியராக பணியாற்றுகிறார். ரித்திகா ஜுனேஜா, பன்னாட்டுப் பொருளாதார உறவுகள் சார்ந்த இந்திய ஆராய்ச்சிக் கழகத்தில் (ஐ.சி.ஆர்.ஐ.ஈ.ஆர்) ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். இக்கட்டுரை இவர்களது தனிப்பட்ட கருத்து என்பது குறிப்பித்தக்கது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“