இந்தியா
அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வேட்டையாடியது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வேட்டையாடியது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் நடைபெற்ற விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், நேரம் கிடைத்தபோதெல்லாம் அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி வேட்டையாடியதாகவும், நேரு விதைத்த விஷ விதைக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் இந்திரா காந்தி எனவும் சாடியுள்ளார்.
அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து மக்களவையில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக 11 தீர்மானங்களை முன்மொழிந்துள்ளார்.
பிரதமர் மோடி ஆற்றிய நீண்ட உரையின்போது 11 தீர்மானங்களை முன்மொழிந்த அவர், அனைவரும் சட்டத்தை பின்பற்றி, கடமையைச் செய்ய வேண்டும் எனவும், ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்றும், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
60 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அரசியல் சாசனத்தை சீர்குலைத்ததாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
எம்.பி. பதவியை நீதிமன்றம் பறித்த கோபத்தின் அடிப்படையில், எமர்ஜென்சியை இந்திரா காந்தி கொண்டு வந்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஒரே குடும்பம் நாட்டின் அரசியல் சாசனத்தை அனைத்து மட்டங்களிலும் சிதைத்ததாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
இதுவரை சுதந்திர தினத்தின்போது நிகழ்த்திய உரைகளின் நேரத்தைவிட பிரதமர் மோடியின் இந்த உரை, அதிக நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கடந்த சுதந்திரத்தின் போது 98 நிமிடங்கள் பிரதமர் மோடி உரையாற்றினார்.