விளையாட்டு
மழையால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

மழையால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?
பிரிஸ்பேனில் பெய்யும் மழையால் போட்டி அவ்வப்போது தடைபட்டது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சம நிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் பிரிஸ்பேன் மைதானத்தில் தற்போது மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 3 நாட்கள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விடவும் 394 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்துள்ளது.
அந்த அணியின் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். மைதானத்தில் அவ்வப்போது மழை தொடர்ந்து குறுக்கிட்டு வருவதால் ஆட்டம் பாதிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்த தொடரை வெல்வது கட்டாயம் என்பதால் ரசிகர்கள் இந்த தொடரை மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.
மழையால் இந்த போட்டி கைவிடப்பட்டு டிராவில் முடிந்தால் அது இந்திய அணிக்கு சாதகமான முடிவை தராது. பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஒருவேளை இந்த ஆட்டம் டிராவில் முடிந்தால் அடுத்ததாக 4 மற்றும் 5-ஆவது டெஸ்ட் போட்டிகள் முறையே மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறுகின்றன. அவ்விரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி விளையாடும்.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றினால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒயிட் வாஷ் ஆக கூடாது.
இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரை 2-2 என செய்தால் இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தால் இலங்கை அணி ஆஸ்திரேலியா தொடரை டிரா செய்ய வேண்டும் அல்லது அந்த அணியை வீழ்த்த வேண்டும். இவை நடந்தால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும்.